அரையிறுதிச் சுற்றில் மிதாலி ராஜை நீக்கியது ஏன்?: தோல்விக்குப் பிறகு இந்திய மகளிர் அணி கேப்டன் விளக்கம்!
மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி...
மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி.
குரூப் பி பிரிவில் இந்திய அணி பலமான நியூஸியை 34 ரன்கள் வித்தியாசத்திலும், 3 முறை சாம்பியன் ஆஸி.யை 48 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றது. அதே நேரத்தில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 112 ரன்களே எடுத்தது. பிறகு அந்த இலக்கை 17.1 ஓவர்களில் அடைந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. அடுத்ததாக, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இறுதிச்சுற்று நாளை நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி ஞாயிறு காலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது.
Advertisement
யாரும் எதிர்பாராதவிதத்தில் அரையிறுதி ஆட்டத்தில் மூத்த வீரர் மிதாலி ராஜ் இந்திய அணியில் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்நிலையில் முக்கியமான இந்த ஆட்டத்தில் மிதாலி ராஜுக்குப் பதிலாக அனுஜா பாட்டீலை மீண்டும் தேர்வு செய்தார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். இந்த முடிவைப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள்.
அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்த பிறகு தன்னுடைய இந்த முடிவு குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியதாவது:
நாங்கள் எடுத்த எல்லா முடிவுகளும் அணிக்காக எடுத்த முடிவுகளே. சில நேரங்களில் அவை சாதகமாக அமையும். சில நேரங்களில் அமையாது. எனவே அதுகுறித்து வருத்தம் இல்லை. நாங்கள் கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். மிதாலி ராஜைத் தேர்வு செய்வதை விடவும் வெற்றியில் பங்கேற்ற அணியைத் தக்கவைக்க முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.