அப்பா, அம்மா, மகள் என ஒரே குடும்பத்தில் மூன்று சர்வதேச செஸ் மாஸ்டர்கள்!
ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகள் என மூன்று பேரும் சர்வதேச மாஸ்டர்களாக இருப்பது இந்திய அளவில் இதுவே முதல்முறை...
13 வருடம் 6 மாதங்கள் 3 நாள். இந்தக் குறைந்த வயதில் மகளிர் சர்வதேச செஸ் மாஸ்டராகியுள்ளார் சென்னைப் பெண்ணான ரக்ஷிதா ரவி.
நெதர்லாந்தில் நடைபெற்ற ஹூஜீவீன் ஓபன் செஸ் போட்டியில் இதற்குரிய புள்ளிகளைப் பெற்று சாதனை செய்துள்ளார் ரக்ஷிதா. 10 மாதங்களுக்கு முன்பு 1881 ஈஎல்ஓ புள்ளிகளைக் கொண்டிருந்த ரக்ஷிதா வசம் தற்போது 2160 ஈஎல்ஓ புள்ளிகள் உள்ளன. அந்தளவுக்குச் சமீபகாலமாக அவருடைய முன்னேற்றம் வியக்கும் விதத்தில் உள்ளது.
ரக்ஷிதாவின் சாதனையின் சிறப்பம்சமே, அவருடைய பெற்றோரும் சர்வதேச செஸ் மாஸ்டர்களாக உள்ளதுதான். ரக்ஷிதாவின் தந்தை டிஎஸ் ரவி சர்வதேச செஸ் மாஸ்டர் தகுதியை அடைந்தவர். பல ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்கேற்றவர். தாய் சாய் மீராவும் மகளிர் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டம் பெற்றவர். இவர்களைப் பின்தொடர்ந்து தற்போது மகளும் சர்வதேச செஸ் மாஸ்டராகியுள்ளார். ரக்ஷிதாவுக்கு சென்னையைச் சேர்ந்த ஆர்.பி. ரமேஷ் பயிற்சியளிக்கிறார்.
Advertisement
நான்கரை வயது முதல் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார் ரக்ஷிதா. 2012-ல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 8 வயதுக்குட்பட்ட ரேபிட் பிளிட்ஸ் உலக இளையோர் போட்டியில் முதலிடம் பெற்று அசத்தினார். அதேபோல 2015-ல் 10 வயதுக்குட்பட்ட உலக இளையோர் செஸ் போட்டியிலும் தங்கம் வென்றார்.
ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகள் என மூன்று பேரும் சர்வதேச செஸ் மாஸ்டர்களாக இருப்பது இந்திய அளவில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. உலக அளவிலேயே இதுபோன்று சர்வதேச மாஸ்டர்களைக் கொண்ட செஸ் குடும்பங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. இந்நிலையில் டிஎஸ் ரவி - சாய் மீரா - ரக்ஷிதா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.