புதிய சாதனை: ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பணியாற்றும் பெண் நடுவர்!
புதிய வரலாறு ஒன்றைப் படைத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் கிளார் போலோசக்..
புதிய வரலாறு ஒன்றைப் படைத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் கிளார் போலோசக்.
ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் கள நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் என்கிற சாதனையை அவர் இன்று நிகழ்த்தியுள்ளார்.
உலக கிரிக்கெட் லீக் ட்விஷன் 2 அளவிலான ஓமன் - நமிபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கள நடுவராக பணியாற்றி வருகிறார் போலோசக். இதன் மூலம் ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் கள நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் என்கிற பெருமைக்கும் சாதனைக்கும் ஆளாகியுள்ளார். இத்தனைக்கும் அவர் ஒரு வீராங்கனையாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காதவர். எனினும் நடுவர் பணியில் திறமையாகப் பணியாற்றி இன்று சாதனை நிகழ்த்தும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
2017-ல் ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஆடவர் உள்ளூர் போட்டி ஒன்றிலும் அவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார். 15 மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றிய போலோசக், 2017 ஒருநாள் உலகக் கோப்பை, 2018 டி20 உலகக் கோப்பை ஆகிய முக்கியமான போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றிய பெருமை கொண்டவர்.