முகப்பு
செய்திகள்

நடுவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியாத பொலார்ட் மீது ஐசிசி நடவடிக்கை!

நடுவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியாத பொலார்டுக்கு ஒரு அபராதப் புள்ளியும் ஆட்ட ஊதியத்திலிருந்து...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:44 AM
பகிர்:

நடுவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியாத பொலார்டுக்கு ஒரு அபராதப் புள்ளியும் ஆட்ட ஊதியத்திலிருந்து 20% அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளன.

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டிஎல்எஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களைக் குவித்தது இந்தியா. ரோஹித் சர்மா 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். 5 ஓவர்களில் வெற்றிக்கு 74 ரன்கள் தேவை என்ற நிலையில் இடையில் மோசமான வானிலையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது 15.3 ஓவரில் 98/4 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது மே.இ.தீவுகள். இதையடுத்து டிஎல்எஸ் முறையில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.    

இந்நிலையில் இந்திய அணியின் இன்னிங்ஸின்போது மாற்று வீரரை அழைத்துக்கொண்டிருந்தார் பொலார்ட். ஆனால் இதுபோல மாற்று வீரரை அழைக்கவேண்டும் என்றால் நடுவர்களிடம் முதலில் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தார்கள் கள நடுவர்கள். எனவே அடுத்த ஓவர் வரை பொறுமையாக இருக்கும்படி பொலார்டிடம் தெரிவித்தார்கள். ஆனால் நடுவர்களின் கட்டளையை பொலார்ட் மீறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நடுவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியாத பொலார்டுக்கு ஒரு அபராதப் புள்ளியும் ஆட்ட ஊதியத்திலிருந்து 20% அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளன. பொலார்ட் முதலில் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு ஆட்ட நடுவருடனான விசாரணையின்போது அவர் மீது குற்றம் சுமத்தி அபராதம் விதித்தார் ஜெப் குரோவ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.