செய்திகள்

இதயமில்லாதவரா பி.வி. சிந்து?: பெண் பயிற்சியாளரின் குற்றச்சாட்டுக்கு தந்தை பதில்!

எழில்

உலக சாம்பியன் பி.வி.சிந்துவின் கொரிய பயிற்சியாளர் கிம் ஜி ஹியுன் தனிப்பட்ட காரணங்களால் கடந்த செப்டம்பர் மாதம் பதவி விலகினார். 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கோபிசந்தின்  மேற்பார்வையில் சிந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று வந்தார். எனினும் பெரிய போட்டிகளில் இறுதிச் சுற்றில் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பி வந்தார். 

சிந்துவின் ஆட்டப் போக்கை மாற்றும் வகையில் கொரியாவின் முன்னாள் ஆசிய சாம்பியன் கிம் ஜி ஹியுனை இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் நியமித்தது. அதன்பின் சிந்து ஆக்ரோஷமான ஆட்டமுறைக்கு மாறினார். இதன் மூலம் முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

நியூஸிலாந்தில் உள்ள தனது கணவர் ரிட்சி மார்ருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது எனக் கூறி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் கிம். ஆனால் அதன்பிறகு, நான்கு மாதங்கள் கழித்து தாய்வானின் கிளப் ஒன்றில் பயிற்சியாளராக இணைந்தார். இந்நிலையில் கொரிய நிருபருக்கு கிம் அளித்த பேட்டியில், உலக சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குவதற்குச் சில நாள்களுக்கு முன்பு உடல் நலமில்லாமல் நான் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது எனக்கு போன் செய்த சிந்து, என் உடல்நலம் பற்றி விசாரிக்காமல் நான் எப்போது திரும்பி வருவேன் என்று தான் கேட்டார். இதயமில்லாதவர் அவர் என்று கூறியுள்ளார்.

கிம்மின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பி.வி. சிந்துவின் தந்தை ரமணா பதில் அளித்துள்ளார். அவர் ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளதாவது: கிம்முக்கு உடல் நலமில்லாதது குறித்து எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி உள்ளார் என சிந்துவுக்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. பயிற்சிக்கு கிம் வரவில்லையென்றவுடன் அவருக்கு போன் செய்து எப்போது திரும்ப வருவீர்கள் என்று கேட்டார் சிந்து. மிகவும் உடல் நலமில்லாமல் இருந்தார் என்பது சிந்துவுக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் சிந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றிருக்க மாட்டார் என எண்ணுகிறீர்களா? மேலும் சிந்து தனது வெற்றிகளின் முக்கியக் காரணமாக கிம்மின் பெயரைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பங்களிப்பைச் சொல்லாமல் இருந்ததில்லை. இதெல்லாம் நடப்பது வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார். 

தந்தை ரமணா, பயிற்சியாளர் கிம் உடன் பி.வி. சிந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT