முகப்பு
செய்திகள்

சதமடித்து மீண்டும் அசத்திய கவாஜா: இந்திய அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:22 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 5-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதலிரண்டு ஆட்டங்களை வென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்களை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. 

இந்நிலையில் தில்லியில் இன்று தொடங்கியுள்ள 5-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆஸி. அணியில் ஸ்டாய்னிஸ், நாதன் லயன் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் சாஹலுக்குப் பதிலாக ஜடேஜாவும் ராகுலுக்குப் பதிலாக ஷமியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதனால் 4-ம் நிலை வீரராக விஜய் சங்கர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதால் ஷமியும் புவனேஸ்வர் குமாரும் ஆரம்பத்தில் பந்துவீசினார்கள். முதல் 10 ஓவர்களில் ஃபிஞ்சும் கவாஜாவும் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தார்கள். ஓரளவு நன்கு விளையாடி வந்த ஃபிஞ்ச் 27 ரன்களில் ஜடேஜாவின் அற்புதமான பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். 48 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்த கவாஜா, தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். அடுத்துவந்த ஹேண்ட்ஸ்காம்ப் சுழற்பந்துவீச்சாளர்களை நன்கு எதிர்கொண்டார். கோலி பல்வேறு திட்டங்கள் வகுத்தும் இருவரையும் பிரிக்கமுடியாமல் போனது. பிறகு 102 பந்துகளில் தனது 2-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் கவாஜா. கடந்த மூன்று இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள 2-வது சதம் இது. உடனே கூடுதலாக ஒரு ரன்னும் சேர்க்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கவாஜா. இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக இரு சதங்கள் அடித்த முதல் ஆஸி. பேட்ஸ்மேன் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. நான்காவதாகக் களமிறங்கிய மேக்ஸ்வெல், 1 ரன்னில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அரை சதமெடுத்த பிறகு ஹேண்ட்ஸ்காம்ப் 52 பந்துகளில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றியைப் பறித்த டர்னர் களமிறங்கினார். 40-வது ஓவரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. 2 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு மீண்டும் அச்சுறுத்தலாக விளங்கிய டர்னர், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் அதிக ரன்கள் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னிஸ் 20 ரன்களில் புவனேஸ்வர் பந்துவீசில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் கேரி 3 ரன்களில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் என வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி, 229 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நடுவரிசை வீரர்கள் மிகவும்  ஏமாற்றியதால் இந்த நிலை ஏற்பட்டது. பும்ரா விக்கெட்டுகள் எடுக்காமல் போனாலும் முதல் 8 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினார். புவனேஸ்வர், ஜடேஜா, ஷமி விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணி இந்த ஆட்டத்தில் மீண்டு வர உதவினார்கள்.

பும்ரா வீசிய 48-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 4 பவுண்டரிகள் கிடைத்தன. அந்த ஓவரில் நம்பமுடியாத அளவுக்கு 19 ரன்களைக் கொடுத்தார் பும்ரா. அடுத்த ஓவரில் கம்மின்ஸை 15 ரன்களில் வீழ்த்தினார் புவனேஸ்வர். கடைசி ஓவரில் ஜை ரிச்சர்ட்சன் 29 ரன்களில் ரன் அவுட் ஆனார். 

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. தமிழக அணித் தரப்பில் புவனேஸ்வர் 3 விக்கெட்டுகளும் ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →