முகப்பு
செய்திகள்

உள்ளூர் ரசிகர்கள் ஆதரவை நம்பியுள்ள சென்னை, வெற்றிக் கொடி நாட்டுமா மும்பை?

ஐபிஎல் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குவாலிபையர்-ஆட்டத்தில் மோதவுள்ளன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:50 AM
பகிர்:


ஐபிஎல் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குவாலிபையர்-ஆட்டத்தில் மோதவுள்ளன.
இதில் வெல்லும்  அணி  நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை, அதே நேரத்தில் பஞ்சாபுடன் தோல்வியுற்றது சென்னை.
இந்த ஐபிஎல் 2019 சீசனில் உள்ளூர் மற்றும் வெளியூர் என சென்னைக்கு எதிரான 2 ஆட்டங்களிலும் மும்பை ஆதிக்கம் செலுத்தியது. 
உள்ளூர் மைதான பலம்: அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி 7 வெற்றிகளை குவித்து வருகிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றது. கடைசி ஆட்டத்தில் பஞ்சாபிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது சென்னை.
மும்பைக்கு எதிராக குவாலிபையர்-1 ஆட்டத்தில் சொந்த மைதானம் என்ற பெரிய பலத்தோடு களமிறங்குகிறது சென்னை. 
வலுவான மும்பை பந்துவீச்சு: பும்ரா (17 விக்கெட்டுகள்) மலிங்கா (15), பாண்டியா சகோதரர்கள் ஹார்திக் 14, க்ருணால் 10 விக்கெட்டுகள்) ராகுல் சஹார் 10 விக்கெட்டுகள் என வலுவான மும்பையின் பந்துவீச்சை சென்னை எதிர்கொள்ள வேண்டும்.
சென்னை பேட்டிங்: கேப்டன் தோனி, 368 ரன்கள், ஷேன் வாட்ஸன், டூ பிளெஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு ஆகியோரை நம்பி உள்ளது. ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் காயம் காரணமாக ஆட இயலாதது சென்னைக்கு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு பதிலாக முரளி விஜய் அல்லது துருவ் ஷோர் களமிறங்கலாம்.
சிறப்பான சுழற்பந்துவீச்சு: மேலும் இம்ரான் தாஹிர் 21 விக்கெட்டுகள், ஹர்பஜன், ரவீந்திர ஜடேதா தலா 13 விக்கெட்டுகள் என சிறப்பான சுழற்பந்துவீச்சை கொண்டுள்ளது சென்னை. மும்பையின் பலமான பேட்டிங்கை நிலைகுலையச் செய்யுமா சென்னையின் சுழற்பந்துவீச்சு என்பதை காண வேண்டியுள்ளது.
அதிரடி மும்பை பேட்டிங்: ரோஹித் சர்மா 386 ரன்கள், டி காக் 492 ரன்கள், ஹார்திக் 380 ரன்கள், பொல்லார்ட் என வலுவான அதிரடி பேட்டிங் மும்பைக்கு பலமாகும். இவர்கள் அடித்து ஆடத் தொடங்கினால் தடுப்பது சென்னைக்கு சிரமமான  செயலாகும்.
சென்னையின் மிதவேகப்பந்து  வீச்சாளர் தீபக் சஹார் துரிதமாக விக்கெட்டுகளை வீழ்த்தினால் மும்பையின் ரன் குவிப்புக்கு அணை போடலாம். தற்போதைய சீசனில் சென்னையைக் காட்டிலும் மும்பை அணியே ஆதிக்கும் செலுத்தும் நிலை காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.