முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை அணிகள்:  எதிரணிகளுக்கு திடீர் அதிர்ச்சி தரும் ஆப்கானிஸ்தான்

எதிரணிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி வலுவுடன் உள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:


எதிரணிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி வலுவுடன் உள்ளது.
கடந்த 19-ஆம் நூற்றாண்டு மத்தியில் இருந்து ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. எனினும் தொடர் உள்நாட்டுப் போரால் அந்த நாட்டில் கிரிக்கெட் பரவவில்லை. மேலும் லட்சக்கணக்கான அகதிகள் பாகிஸ்தானில் தங்கி இருந்தனர்.
அகதிகள் முகாம்களில் தங்கி இருந்த சிறுவர்களில் பலர் கிரிக்கெட் விளையாடி பயிற்சி பெற்றனர். இவர்களில் சிலரும் தற்போதைய உலகக் கோப்பை ஆப்கன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2015-இல் முதன்முறையாக உலகக் கோப்பையில் இடம் பெற்றது ஆப்கானிஸ்தான். தற்போது டி20 ஆட்டங்களில் பலமான அணியாக உருவெடுத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் நகரில் உள்ள மைதானத்தை சொந்தமாக பயன்படுத்தி வருகிறது ஆப்கன் அணி.
அண்மையில் தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்தையும் பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் எதிரணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் பலத்துடன் உள்ளது ஆப்கானிஸ்தான்.
அணி விவரம்: குல்புதின் நைப் (கேப்டன்), அஷ்கர் ஆப்கன், ஹமித் ஹசன், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், முகமது ஷாஸத், நஜிபுல்லா ஸத்ரன், ரஹ்மத் ஷா, சமியுல்லா ஷின்வாரி, அப்தாப் ஆலம், தெளலத் ஸட்ரன், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, முகமது நபி, முஜிபூர் ரஹ்மான், நூர் அலி ஸத்ரன், ரஷித் கான்.
குல்புதின் நைப் (கேப்டன்): 28 வயதான குல்புதின் நைப் கடந்த 2011-இல் ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமானார். 52 ஆட்டங்களில் 807 ரன்களை பெற்றுள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 82 ஆகும். பிரதான பந்துவீச்சாளராக உள்ள நைப், மொத்தம் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4/27 அவரது சிறந்த பந்துவீச்சாகும். கேப்டனாக இருந்த அஷ்கர் ஆப்கன் நீக்கப்பட்டு, குல்புதின் நைப் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஷ்கர் ஆப்கன்:  ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக இருந்து வந்த அஷ்கர் திடீரென நீக்கப்பட்டார். எனினும் அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார். 31 வயதான அஷ்கர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார். கடந்த 2009-இல் அறிமுகமான அவர், 99 ஆட்டங்களில் 2013 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 103 ஆகும். 1 சதம், 11 அரை சதங்களை விளாசியுள்ளார். 
முகமது ஷாஸத்:  32 வயதான முகமது ஷாஸத் அணியின் விக்கெட் கீப்பராகத் திகழ்கிறார். கடந்த 2009-இல் அறிமுகமான ஷாஸத் 79 ஆட்டங்களில் 2562 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சம் 131 ஆகும். 5 சதங்கள், 13 அரைசதங்களும் இதில் அடங்கும். 
சமியுல்லா ஷின்வாரி: கடந்த 2009-இல் அறிமுகமான சமியுல்லா, ஆல்ரவுண்டராக விளங்குகிறார். 81 ஆட்டங்களில் 1737 ரன்களை சேர்த்துள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 96 ஆகும். 11 அரைசதங்கள் இதில் அடங்கும். மேலும் 45 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ள அவரது சிறந்தபந்துவீச்சு 4/31 ஆகும்.
முஜீப் அர் ரஹ்மான்: 18 வயதான முஜீப் அர் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார். 28 ஒருநாள் ஆட்டங்களில் 51 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 5/50 அவரது சிறந்த பந்துவீச்சாகும். கடந்த 2017-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார் முஜீப் அர்.
ரஷித் கான்:  19 வயதான ரஷித் கான் ஆப்கன் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர். சிறந்த கூக்லி முறையில் வீசும் பந்து வீச்சாளரான ரஷித், 2015-இல் அறிமுகமானார். 57 ஆட்டங்களில் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 7/18 என்பதே அவரது சிறந்த பந்துவீச்சாகும். பேட்டிங்கிலும் அவ்வப்போது ஜொலிப்பார்.
முகமது நபி: அணியின் மூத்த வீரரான முகமது நபி (34) சிறந்த ஆல்ரவுண்டராக விளங்குகிறார். கடந்த 2009-இல் அறிமுகமான நபி, 111 ஆட்டங்களில் 2565 ரன்களை சேர்த்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 116 ஆகும். இதில் 1 சதம், 13 அரைசதங்களும் அடங்கும். பந்துவீச்சில் 118 விக்கெட்டுகளை வீழ்த்திய நபியின் சிறந்த பந்துவீச்சு 4/30 ஆகும்.
இவர்களோடு ஹமித் ஹசன், தெளலத் ஸட்ரன், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, ஹஸ்ரத்துல்லா ஸசாய், நஜிபுல்லா ஸ்ட்ரன், ரஹ்மத் ஷா, நூர் அலி ஸட்ரன், அப்தாப் ஆலம் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.