முகப்பு
செய்திகள்

இந்திய அணிக்குப் பலமான அடித்தளம்: 2-வது சதமடித்தார் மயங்க் அகர்வால்!

183 பந்துகளில் தனது 2-வது சதத்தைப் பதிவு செய்தார்.

Updated On : 10 அக்டோபர், 2019 at 2:56 PM
பகிர்:

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் புணேவில் இன்று முதல் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விஹாரி நீக்கப்பட்டு, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடந்த டெஸ்டில் இரு சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா இன்று 14 ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

Advertisement

இதன்பிறகு மயங்க் அகர்வாலும் புஜாராவும் கவனமாக விளையாடி, தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நன்குச் சமாளித்தார்கள். 15.1 ஓவர்களில் இந்திய அணிக்கு 50 ரன்கள் கிடைத்தன. முதல் ரன்னை எடுக்க புஜாராவுக்கு 13 பந்துகள் தேவைப்பட்டன. மயங்க் அகர்வால் பவுண்டரிகளாக அடித்து தனது ரன்களை உயர்த்தினார்.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 34, புஜாரா 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு வழக்கம்போல அவரவர் பாணியில் மயங்க் அகர்வாலும் புஜாராவும் விளையாடினார்கள். 112 பந்துகளில் மயங்க் அகர்வாலும் 107 பந்துகளில் புஜாராவும் அரை சதங்களை எட்டினார்கள். ஆனால், அரை சதமெடுத்த அடுத்த ஓவரிலேயே 58 ரன்களில் ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் புஜாரா. 

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 53 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 86 ரன்களுடனும் கோலி ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு மஹாராஜ் வீசிய 56-வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை அடித்தார் மயங்க் அகர்வால். அடுத்ததாக, 183 பந்துகளில் தனது 2-வது சதத்தைப் பதிவு செய்தார்.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 57 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் 104, கோலி 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.