எனது அறையில் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்துக்கான இடம் காலியாக உள்ளது என பாட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி.சிந்து கூறியுள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றது, எனது முந்தைய தோல்விகளால் ஏற்பட்ட காயங்களை குணமடையச் செய்து விட்டது.
6 பெரிய போட்டிகளில் இறுதி ஆட்டங்களில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றது மிகவும் காயமடையச் செய்திருந்தது. இந்த உலகப் போட்டி தங்கம் அனைத்துக்கும் மருந்தாகி விட்டது. இறுதிச் சுற்றில் தோற்று விடும் எனது நிலை குறித்து மக்கள் பலவாறு பேசத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கு எனது ராக்கெட் மூலம் பதிலளித்து விட்டேன். எனது பட்டியலில் ஓரே ஒரு தங்கம் (ஒலிம்பிக்) மட்டுமே நிலுவையாக உள்ளது.
விருதுகள் வைக்குமிடத்தில் அதற்கான இடம் காலியாகவே உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தங்கத்துக்கான பயணம் மிகவும் கடினமாக இருக்கும். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டி தான் எனது முதல் போட்டி ஆகும். தென்கொரிய பயிற்சியாளர் கிம்முடன் சேர்ந்து ஆடுவதில் மாற்றங்களை செய்துள்ளேன். தரவரிசை குறித்து நான் கவலைப்படுவதில்லை. அடுத்து வரும் சீன மற்றும் கொரிய ஓபன் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளேன்.
மகளிர் ஒற்றையர் வரிசையில் சாய்னா, எனக்கு பின் யாரும் இல்லாதது சற்று கவலை தருகிறது. ஜூனியர் மட்டத்தில் பல்வேறு நாடுகளின் வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்திய வீராங்கனைகள் கடினமாக உழைக்க வேண்டும் என்றார் சிந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.