மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் உசைன் போல்ட், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4*100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் கரோனா வைரஸால் உசைன் போல்ட் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் தனது 34-வது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினார் போல்ட். கெய்ல் உள்பட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட அந்த விழாவில் யாரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதில் கரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் போல்ட் கூறியுள்ளார். இதனால் ஜமைக்காவில் உள்ள தனது வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த மே 17 அன்று பெண் குழந்தை பிறந்தது. உசைன் போல்ட் தந்தையானது குறித்த தகவலை ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், தனது ட்விட்டர் வழியாகத் தெரிவித்தார். உசைன் போல்ட் - காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள். தனது குழந்தைக்கு ஒலிம்பியா லைட்னிங் என்று பெயர் சூட்டிய போல்ட், குழந்தையின் புகைப்படத்தையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.