டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு கவாஸ்கர், பாண்டிங் ஆதரவு
மயங்க் அகர்வால், பிரித்வி ஷாவை விடவும் அவர் சிறந்த வீரர்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு முன்னாள் வீரர்களான கவாஸ்கர், பாண்டிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.
முதல் டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகச் செயல்பட்டதால், அடுத்து வரும் டெஸ்ட்டுகளில் அதில் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் ரோஹித் சா்மா சோ்க்கப்படவில்லை. அதைத் தொடா்ந்து காயத்தில் இருந்து மீண்ட ரோஹித் சா்மாவுக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பிசிசிஐ சாா்பில் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் தலைமையிலான குழு, ரோஹித் சா்மா களமிறங்கும் அளவுக்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகச் சான்றளித்தது. இதையடுத்து ரோஹித் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். தற்போது 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்டில் இந்திய அணி மோசமாகத் தோல்வியடைந்ததால் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்களான கவாஸ்கர், பாண்டிங் ஆகியோர் கூறியுள்ளார்கள்.
ஆஸி. முன்னாள் கேப்டன் பாண்டிங் கூறியதாவது:
டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா நிச்சயம் விளையாடுவார். மயங்க் அகர்வால், பிரித்வி ஷாவை விடவும் அவர் சிறந்த வீரர். உடற்தகுதியுடன் இருந்தால் அவர் நிச்சயம் விளையாடுவார் என்றார்.
இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் உள்ள ரோஹித் சர்மாவால் 2-வது டெஸ்டில் விளையாட முடியாது. ஆனால் 3-வது மற்றும் 4-வது டெஸ்டுகளில் நிச்சயம் விளையாடுவார். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை சரியான முறையில் எதிர்கொள்ளவில்லை என்றார்.