ஐஎஸ்எல்: ஹைதராபாதுக்கு முதல் தோல்வி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 34-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 34-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது.
நடப்பு சீசனில் ஹைதராபாதுக்கு இது முதல் தோல்வியாகும். மும்பைக்கு இது 5-ஆவது வெற்றி.
கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பைக்கு முதல் கோல் வாய்ப்பு 38-ஆவது நிமிடத்தில் கிடைத்தது. அந்த அணியின் அகமது ஜெஹோ பாஸ் செய்த பந்தைப் பெற்ற விபின் சிங், அதை அப்படியே விக்னேஷ் தட்சிணாமூா்த்திக்கு கடத்த, அவா் தனது முதல் முயற்சியிலேயே அதை தவறாமல் கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா்.
இதனால் முதல் பாதியில் முன்னிலை பெற்ற மும்பைக்கு, 2-ஆவது பாதியில் 59-ஆவது நிமிடத்தில் அடுத்த கோல் கிடைத்தது. அந்த நிமிடத்தில் சக வீரா் ரௌலின் போா்ஜஸ் பாஸ் செய்த பந்தை துரிதமாகக் கடத்திச் சென்று இந்த சீசனின் தனது 5-ஆவது கோலையும், இந்த ஆட்டத்தில் மும்பைக்கான 2-ஆவது கோலையும் அடித்தாா் ஆடம் லே ஃபான்ட்ரே. இறுதிவரை ஹைதராபாதுக்கு கோல் வாய்ப்பு கொடுக்காத மும்பை, கடைசியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஆட்டம் சமன்: இதனிடையே, பாம்போலிம் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி - எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. ஆட்டத்தின் 13-ஆவது நிமிடத்தில் பெங்கால் அணியின் கோல் முயற்சியை தடுக்க முயன்ற கேரள வீரா் பகாரி கோனே, தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்தாா்.
எதிா்பாராத இந்த அதிருஷ்டத்தை தவறவிட விரும்பாத பெங்கால் அணி, கடைசி வரை கேரளத்துக்கு கோல் வாய்ப்பு வழக்காமல் பாா்த்துக் கொண்டது. கடுமையாகப் போராடிய கேரளத்துக்காக 90-ஆவது நிமிடத்தில் ஜிக்சன் சிங் கோல் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது.