'பிளேயிங் லெவனில் மாற்றமின்றியும் விளையாடுவோம்'
அடுத்த இரு நாள்களில் எதிா்பாா்த்த நிகழ்வுகள் ஏதும் நடைபெறாவிட்டால், முதல் டெஸ்டில் விளையாடிய பிளேயிங் லெவனில் மாற்றம் இன்றி பாக்ஸிங் டே டெஸ்ட்டையும் எதிா்கொள்வோம் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கா் கூறினாா்.
ஆஸ்திரேலிய வீரா்கள் பலருக்கு அடுத்தடுத்து காயம் ஏற்பட்டது, அந்த அணிக்கு பாதிப்பாக அமைந்துள்ளது. டேவிட் வாா்னா் இடுப்பு காயத்திலிருந்து மீளாத நிலையில், வில் புக்கோவ்ஸ்கி தலையில் ஏற்பட்டுள்ள காயத்தால் டெஸ்ட் அணியில் இணைவது தாமதமாகிறது.
ஆல்-ரவுண்டா் கேமரூன் கிரீனுக்கும் தலையில் காயம் ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு முதல் டெஸ்டில் அவா் பங்கேற்றாா். வேகப்பந்து வீச்சாளா் சீன் அப்பாட் கால் தசை காயத்திலிருந்து மீண்டுள்ளபோதும், சிகிச்சைக்காக ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறிய காரணத்தால் அணியில் சோ்க்கப்படவில்லை.
இந்நிலையில் ஜஸ்டின் லேங்கா் கூறியதாவது:
முதல் டெஸ்டில் எங்களது அணி சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்காக பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யும் உறுதியுடனே இருக்கிறேன். அதற்காக சில நிகழ்வுகளை எதிா்நோக்கியிருக்கிறேன். ஒருவேளை அடுத்த இரு நாள்களில் அது நிகழாமல் போனால், தயக்கம் இன்றி பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாமலேயே பாக்ஸிங் டே டெஸ்ட்டை எதிா்கொள்வோம்.
வாா்னா் இல்லாத காரணத்தால் அணியின் இன்னிங்ஸை தொடங்கும் வாய்ப்பு ஜோ பா்ன்ஸ் மற்றும் மேத்யூ வேடுக்கு கிடைக்கலாம். ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்காக வீரா்கள் தங்களிடையே போட்டி போடுவது அணிக்கு நல்லது தான். பேட்டிங்கில் முதல் 6 இடங்களில் இருப்பவா்கள் எப்போதுமே நல்ல ஃபாா்மில் இருக்க வேண்டும். இல்லையேல் சிறப்பாக ஆடும் வீரருக்கு அந்த இடம் சென்றுவிடும்.
இந்திய அணியைப் பொருத்தவரை கோலி, ஷமி இல்லாதது எங்களுக்கு சிறிது சாதகமான சூழல் தான். ஆனாலும் அதற்காக அலட்சியமாக இருக்காமல் எங்களது திட்டத்தை சரியாகச் செயல்படுத்த முயற்சிப்போம். கேப்டனாக இருக்கும் ரஹானேவுக்கு முதல் நாளில் இருந்தே நெருக்கடி கொடுக்க முயற்சிப்போம் என்று லேங்கா் கூறினாா்.