தயாராகும் அடுத்த சுவர்: மற்றொரு இரட்டைச் சதம் அடித்த ராகுல் டிராவிட் மகன்!
கடந்த 2 மாதங்களில் இரு இரட்டைச் சதங்கள் அடித்துச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்...
பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடின் 14 வயது மகன் சமித் டிராவிட், ஜுனியர் கிரிக்கெட்டில் கவனம் பெற்று வருகிறார். கடந்த 2 மாதங்களில் இரு இரட்டைச் சதங்கள் அடித்துச் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற பிடிஆர் ஷீல்ட் 14 வயதுக்குட்பட்டோருக்கான குரூப்1, டிவிஷன் 2 போட்டியில் மல்யா அதிதி இண்டர்நேஷனல் அணிக்காக விளையாடிய சமித், பிஜிஎஸ் நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார். 144 பந்துகளில் ஒரு சிக்ஸர் (டிராவிட் போலவே சிக்ஸரில் ஈடுபாடு இல்லை), 26 பவுண்டரிகளுடன் 211 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சமித்தின் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்தது. எதிரணியால் 50 ஓவர்களில் 254/3 ரன்கள் மட்டுமே எடுத்ததால் சமித்தின் அணி இந்த ஆட்டத்தில் வெற்றியடைந்தது.
கடந்த டிசம்பர் 20 அன்று, இதேபோல ஜுனியர் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் எடுத்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார் சமித். தற்போது இன்னொரு இரட்டைச் சதம் எடுத்துள்ளார். இதுதவிர பந்துவீச்சாளராகவும் அவ்வப்போது விக்கெட்டுகள் எடுத்து தனது அணிக்கு உதவி வருகிறார்.
Advertisement
2015 முதல் தனது பேட்டிங் திறமையால் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் சமித். இதனால் வருங்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.