பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்குப் புதிய கேப்டன்
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சர்ஃபராஸ் அகமது, பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து கடந்த வருட அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இதன்பிறகு அஸார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் அஸாம் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். அஸார் அலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிகிற வரைக்கும் கேப்டனாக நீடிப்பார். பாபர் அஸாம், டி20 உலகக் கோப்பை வரை டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பிறகு, பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் பாபர் அஸாம் நியமிக்கப்பட்டார்.
டிசம்பர் - ஜனவரியில் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்தச் சுற்றுப்பயணத்துக்கான 35 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கேப்டனாக இருந்த அஸார் அலிக்குப் பதிலாக ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ள பாபர் அஸாம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் 26 வயது பாபர் அஸாம், மூன்று வகை கிரிக்கெட் அணிகளின் கேப்டனாகவும் உள்ளார்.
எட்டு டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய அஸார் அலி, இரு வெற்றிகளையும் மூன்று தோல்விகளையும் பெற்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.