2 புள்ளிகளை இழந்த இந்திய அணி: விராட் கோலி அதிருப்தி
குறைவாக ஓவர்கள் வீசியதால் இந்திய அணி 2 புள்ளிகளை இழந்தது பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளர் இந்திய கேப்டன் விராட் கோலி.
குறைவாக ஓவர்கள் வீசியதால் இந்திய அணி 2 புள்ளிகளை இழந்தது பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளர் இந்திய கேப்டன் விராட் கோலி.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோனது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிா்ந்துகொண்டன.
முதல் டெஸ்டில் இரு அணிகளும் ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இரு அணிகளும் முதல் டெஸ்டில் பெற்ற 4 புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை நீக்கியுள்ளது. இதனால் தற்போது இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் 2-வது டெஸ்டில் நாளை விளையாடவுள்ளன. இதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் குறைவான ஓவர்களை வீசியதற்காக இரு அணிகளுக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்து 40% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்ட ஊதிய அபராதம் என்பது இரு அணிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படாது. ஆட்டம் டிரா ஆனதால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் மட்டுமே முதல் டெஸ்டிலிருந்து கிடைத்தன. ஆனால் தற்போது அதிலிருந்தும் 2 புள்ளிகளை எடுத்துக்கொண்டு விட்டது ஐசிசி. இதனால் பறிபோன 2 புள்ளிகள் கடைசிக்கட்டத்தில் சிக்கலை ஏற்படுத்துமா என்கிற கவலை இரு அணி ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த முறை ஆஸ்திரேலிய அணி இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டு அதனால் பெரிய இழப்பைச் சந்தித்தது. இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் குறைவான ஓவர்களை வீசியதால் 4 அபராதப் புள்ளிகள் ஆஸி. அணிக்கு அளிக்கப்பட்டன. கடைசியில் இதன் காரணமாக ஆஸி. அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது. அப்படியொரு நிலை இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு ஏற்படுமா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
2 புள்ளிகளை இழந்ததற்குத் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. இதுபற்றி அவர் கூறியதாவது:
குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு ஓவர்கள் வீச வேண்டும் என்பது எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தும் இரு புள்ளிகளை இழந்தது வருத்தமாக உள்ளது. கடைசியில் நிறைய ஓவர்கள் வீசினோம். இருந்தும் 2 ஓவர்கள் குறைவாக வீசியுள்ளோம். சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தினாலே 10-15 நொடிகளைச் சேமிக்க முடியும். அதை 2-வது இன்னிங்ஸில் சரி செய்தோம். புள்ளிகளை எடுப்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முக்கியமானது என்றார்.