முகப்பு
செய்திகள்

வாஷிங்டன், அஸ்வின் நிதானம்: 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து ஆதிக்கம்!

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டத்தின்போது 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 29 ரன்களுக்கும், விராட் கோலி 11 ரன்களுக்கும், அஜின்க்யா ரஹானே 1 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 73 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, புஜாரா மற்றும் ரிஷப் பந்த் பாட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா தனது பாணியில் நிதானம் காட்ட, பந்த் டி20 பாணியில் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார். புஜாரா 106-வது பந்திலும், பந்த் 40-வது பந்திலும் அரைசதத்தை எட்டினர்.

இந்த பாட்னர்ஷிப் 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. புஜாரா 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோம் பெஸ் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்தார். ஆனால், அருகிலிருந்த பீல்டரின் தோள்பட்டையில் பட்ட பந்து அடுத்த பீல்டரின் கைக்கு நேரடியாக சென்றது. இதன்மூலம் அது எளிதான கேட்ச் ஆனது.

பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய தருணத்தில் புஜாரா ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மிரட்டி வந்த பந்த் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெஸ் பந்தில் 91 ரன்களுக்கு (88 பந்துகள், 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் நிதானம் காட்டி விக்கெட்டைப் பாதுகாத்தனர். இருவரும் 3-வது நாள் ஆட்டத்தின் இறுதிவரை மேற்கொண்டு விழாமல் பார்த்துக் கொண்டனர்.

3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 321 ரன்கள் பின்தங்கியுள்ளது. வாஷிங்டன் 33 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து தரப்பில் பெஸ் 4 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.