ரன்களும் விக்கெட்டுகளும்: இங்கிலாந்து மதிய உணவு இடைவேளையில் 139/5
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இஷாந்த் சர்மா, ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த டெஸ்டிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியில் பட்லர், சாம் கரணுக்குப் பதிலாக போப், வோக்ஸ் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் 57, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள்.
முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. மலான் 26 ரன்களுடனும் ஓவர்டன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தார்கள். ரூட் 21 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் போல்ட் ஆனார்.
இன்று, ஓவர்டனைக் கூடுதலாக ரன் எதுவும் எடுக்க விடாமல் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். பிறகு மலானை 31 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்லிப்பில் அருமையாக கேட்ச் பிடித்தார் ரோஹித் சர்மா. நீண்ட நாளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த உமேஷ் யாதவ் உடனடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த போப்பும் பேர்ஸ்டோவும் விரைவாக ரன்கள் எடுத்தார்கள். நிறைய பவுண்டரிகள் கிடைத்தன. ஒரு ஓவரில் போப் மூன்று பவுண்டரிகள் அடித்தால் அடுத்த ஓவரிலேயே பேர்ஸ்டோவும் மூன்று பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதன்பிறகு உணவு இடைவேளை நெருங்கியபோதுதான் நிதானமாக ஆடினார்கள். இருவரும் 77 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்தைச் சரிவிலிருந்து மீட்டெடுத்தார்கள்.
2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. போப் 38, பேர்ஸ்டோ 34 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகளும் பும்ரா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். இன்னும் 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 52 ரன்கள் பின்தங்கியுள்ளது.