தெ.ஆ. அணியை 125 ரன்களுக்குச் சுருட்டி தொடரை வென்ற இலங்கை அணி: ஹைலைட்ஸ் விடியோ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்றுள்ளது இலங்கை அணி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்றுள்ளது இலங்கை அணி.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் ஒருநாள் ஆட்டத்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையும் 2-வது ஒருநாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்காவும் வென்றன. இதனால் கடைசி ஒருநாள் ஆட்டத்தை வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் முனைப்புடன் விளையாடின.
கொழும்பில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாகப் பந்துவீசியதால் இலங்கை அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வேகப்பந்து வீச்சுக்குப் பெயர் பெற்ற தெ.ஆ. அணி இன்று நான்கு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு முதல்முறையாக 40 ஓவர்களை வீசி ஆச்சர்யப்படுத்தியது. (இதற்கு முன்பு 1996-ல் மும்பையில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 33 ஓவர்களுக்குச் சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்தது.) ஷம்சி, மஹாராஜ், மார்க்ரம், லிண்டே ஆகியோ தலா 10 ஓவர்களை வீசினார்கள். இலங்கை பேட்ஸ்மேன் சரித் அசலங்கா அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். கேஷவ் மஹாராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பிறகு பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவை 30 ஓவர்களில் 125 ரன்களுக்குச் சுருட்டி 3-வது ஒருநாள் ஆட்டத்தையும் தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி. தெ.ஆ. அணியில் கிளாசென் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் அறிமுக வீரர் மஹீஷ் தீக்ஷனா அற்புதமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை அணி வென்றுள்ளது.
டி20 தொடர் செப்டம்பர் 10 முதல் தொடங்குகிறது.