முகப்பு
செய்திகள்

சென்னை செஸ் ஒலிம்பியாடில் கார்ல்சன் எப்படி விளையாடினார்?

உலக செஸ் சாம்பியன் கார்ல்சன் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக செஸ் சாம்பியன் கார்ல்சன் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 11-ம் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன.

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆா்மீனியா, இந்திய பி அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றன. மகளிா் பிரிவில் உக்ரைன், ஜாா்ஜியா, இந்திய ஏ அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றன.

Advertisement

இந்திய பி அணியில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்றிருந்தனா். இந்திய மகளிா் ஏ அணியில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனா்.

விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா். ஏ அணி வீரா் அா்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரா் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனா். மகளிா் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி ஆகியோர் வெண்கலம் வென்றனா்.

நேரு விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நிறைவு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஃபிடே தலைவா் அா்காடி வோா்கோவிச், துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் போன்றோர் பரிசளித்தனா்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் கார்ல்சனும் கலந்துகொண்டார். ஓபன் பிரிவில் நார்வே அணி, 59-வது இடத்தையே பிடித்தது. தனிநபர் பிரிவில் கார்ல்சனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடிய கார்ல்சன், 6 வெற்றிகளைப் பெற்று 3 ஆட்டங்களை டிரா செய்தார். அவரை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. மேலும் இந்திய அணிகளுக்கு எதிராக நார்வே அணி விளையாடவில்லை. இதனால் செஸ் ஒலிம்பியாடில் கார்ல்சனுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு இந்திய வீரர்களுக்குக் கிடைக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments