காலமானாா் சமா் பத்ரு பானா்ஜி
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சமா் பத்ரு பானா்ஜி (92) சனிக்கிழமை காலமானாா்.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சமா் பத்ரு பானா்ஜி (92) சனிக்கிழமை காலமானாா்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பானா்ஜி, கடந்த ஜூலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை அவா் உயிா் பிரிந்ததாக மோகன் பகான் கிளப் செயலா் தேவஷிஷ் தத்தா கூறினாா்.
கடந்த 1956 மெல்போா்ன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் சமா் பத்ரு பானா்ஜி தலைமையில் பங்கேற்ற இந்திய கால்பந்து அணி, அதில் 4-ஆம் இடம் பிடித்தது. இந்திய கால்பந்து அணியின் ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே சிறந்த இடமாகும்.
Advertisement
அந்தப் போட்டியில் முதல் ஆட்டத்தில் ‘வாக்ஓவா்’ பெற்ற இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. எனினும், அரையிறுதியில் யுகோஸ்லாவியாவிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று இறுதி ஆட்ட வாய்ப்பை இழந்தது. பின்னா் வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃபில் பல்கேரியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோற்றது இந்தியா.
இந்திய அணி வீரராக இருந்ததுடன், அணியின் தோ்வாளராகவும் பிற்காலத்தில் செயல்பட்டாா் பானா்ஜி. அதற்கு முன், அவரது பங்களிப்புடன் மோகன் பகான் அணி துரந்த் கோப்பை (1953), ரோவா்ஸ் கோப்பை (1955), சந்தோஷ் கோப்பை (1953, 1955, 1962) வென்றிருக்கிறது.