தில்லி அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக அணி, முதல் இன்னிங்ஸில் 427/8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
தமிழக அணி 3 புள்ளிகளும் தில்லி அணி 1 புள்ளியும் பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மோதுகின்றன. தில்லி அணியிலிருந்து நிதிஷ் ராணா நீக்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா, சைனி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 97.1 ஓவர்களில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது துருவ் ஷோரே 66, ஜான்டி சித்து 57 ரன்கள் எடுத்தார்கள். பிரன்ஷு 58 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 300 ரன்களைத் தாண்ட உதவியாக இருந்தார். தமிழக அணியின் எல். விக்னேஷ், சந்தீப் வாரியர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
2-வது நாள் முடிவில் தமிழக அணி, 54 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 17, பிரதோஷ் ரஞ்சன் பால் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
3-வது நாளன்று தமிழக அணி அபாரமாக பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் எடுத்தது. திருப்பூரைச் சேர்ந்த இளம் வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால், தனது முதல் சதத்தை எடுத்தார். அவர் 212 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 52 ரன்களும் அஸ்வின் கிறிஸ்ட் ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் எடுத்தார்கள். தமிழக அணி, முதல் இன்னிங்ஸில் 116 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதனால் முதல் இன்னிங்ஸில் 124 ரன்கள் முன்னிலை பெற்றது.
3-வது நாள் முடிவில் தில்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஷோரே 10 ரன்களுடனும் விகாஸ் மிஸ்ரா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.