தவான், ருதுராஜ் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு கரோனா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
"ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், உதவியாளர்கள் சிலருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு முதல் நான்கு பேர் வரை இருப்பார்கள்."
இதையும் படிக்க | இந்தியாவில் மகளிர் டி20 போட்டி: 90 வீராங்கனைகள் தேர்வு
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது. வீரர்கள் மூவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் மூவரும் ஒருவார காலம் தனிமையில் இருந்து தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அணியுடன் இணைவார்கள்.
இதன்மூலம், தயார்நிலை வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ஷாருக்கான், சாய் கிஷோர் மற்றும் ரிஷி தவான் ஆகியோர் அணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குவதற்கு வெங்கடேஷ் ஐயரைப் பரிந்துரைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.