செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற இரு நாடுகள்

DIN

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகமும் அயர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ. இந்தப் போட்டி முடிந்த அடுத்த 335 நாள்களில் இன்னொரு டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள 4 நாடுகள் தகுதிச்சுற்றின் வழியே போட்டியில் பங்கேற்கும். முதல் சுற்றில் தேர்வாகும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர அணிகளுடன் இணைந்துகொள்ளும்.

இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகமும் அயர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

ஓமனில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டியில் அரையிறுதியில் நேபாளத்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரகம். அதேபோல மற்றொரு அரையிறுதியில் அயர்லாந்து அணி, ஓமன் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகமும் அயர்லாந்தும் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் அணி, 2014-க்குப் பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. அயர்லாந்து அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT