முகப்பு
செய்திகள்

ஆஷஸ்: இங்கிலாந்து 188 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் 5-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் வுட் மற்றும் சக வீரர்கள்
பகிர்:


ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் 5-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் 5-வது டெஸ்ட் ஆட்டம் ஹோபார்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.

அலெக்ஸ் கேரி 10 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2-ம் நாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. ஸ்டார்க் (3), கேப்டன் பேட் கம்மின்ஸ் (2) ஆகியோரை ஷார்ட் பிட்ச் பந்து மூலம் மார்க் வுட் வீழ்த்தினார். நிதானமாக ரன் சேர்த்து விளையாடிய கேரியை (24) கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தி அதிரடியாக ரன் குவித்த நாதன் லயானை (31) ஸ்டுவர்ட் பிராட் வீழ்த்தினார்.

இதன்மூலம், 75.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் (0) ரன் அவுட் ஆக மோசமான தொடக்கமாக அமைந்தது.

இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. அனுபவ வீரர்களான டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் ரன் குவித்தால் இங்கிலாந்து ஸ்கோர் உயரும் என்பதுதான் இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கதையாக இருந்துள்ளது.

ஆனால், இந்த இன்னிங்ஸில் எவரும் கைகொடுக்காததால் அந்த அணி 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் மற்றும் கேமரூன் க்ரீன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

115 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலியா சற்று முன்பு வரை 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

உஸ்மான் கவாஜா 11 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →