35 வயது தாய் (4 வயதில் மகன்), உலகின் அதிவேக வீராங்கனையாகச் சாதித்துக் காட்ட முடியுமா? முடியும் என நிரூபணமாகியுள்ளது.
ஜமைக்காவின் ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ், உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 10.67 விநாடிகளில் தூரத்தைக் கடந்து உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தனது 12-வது பதக்கத்தை வென்றார். உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட், அலிசன் ஃபெலிக்ஸ் ஆகியோர் மட்டுமே ஷெல்லியை விடவும் அதிகப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் இவர் வென்ற 5-வது தங்கம் இது (2009, 2013, 2015, 2019, 2022). உசைன் போல்ட் 3 முறை மட்டுமே தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்ஸில் 2008, 2012-ல் 100. மீ. ஓட்டத்தில் ஷெல்லி, தங்கம் வென்றுள்ளார்.
இது தாய்மைக்குக் கிடைத்த வெற்றி. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். தங்கம் வெல்லாததால் ஊருக்குத் திரும்பி கடுமையாக உழைத்தேன். என்னை இன்னும் மேம்படுத்திக்கொண்டு இப்போட்டிக்கு வந்து வெற்றி பெற்றுள்ளேன். ஒரு பெண் 35 வயதைக் கடந்துவிட்டால் அவருடைய திறமை மங்கிவிடும் எனப் பலரும் எண்ணுகிறார்கள். என்னால் இப்போது போட்டியிட்டு தங்கம் வெல்ல முடிகிறது என்கிறார் ஷெல்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.