பரபரப்பான டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்தாலும் வெற்றியை நெருங்கியுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்தாலும் வெற்றியை நெருங்கியுள்ளது.
இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்கிறது. கேலேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களும் பாகிஸ்தான் அணி 218 ரன்களும் எடுத்தன. இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சண்டிமல் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் டெஸ்டில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 342 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி, 4-ம் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அப்துல்லா சஃபிக் 112, முகமது ரிஸ்வான் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்றைய ஆட்டத்தின் முதல் பகுதியில் இலங்கை வீரர்கள் கடுமையாக முயற்சி செய்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ரிஸ்வான் 40 ரன்களிலும் சல்மான் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 5-ம் நாள் உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் அப்துல்லா சஃபிக் 139 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் அணி வெற்றி பெற 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 44 ரன்கள் தேவைப்படுவதால் வெற்றியை அந்த அணி நெருங்கி வருகிறது.