செய்திகள்

ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?: கங்குலி பதில்

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள் தொடர்ந்து நடைபெறும்...

DIN

அடுத்த இரு வருடங்களுக்கு ஐபிஎல் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்காது என பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஏலத்தில் விட்டதன் மூலம் மொத்தமாக ரூ.48,390.5 கோடி வருவாய் ஈட்டவுள்ளது பிசிசிஐ. தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்னி ஸ்டார் நிறுவனமும் டிஜிடல் ஒளிபரப்பில் வையாகாம் நிறுவனமும் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான உரிமைகளைப் பெற்றுள்ளன.  இதனால் ஐபிஎல் போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: அடுத்த ஐசிசி எஃப்டிபி அட்டவணையில் (2023 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு), ஐபிஎல் போட்டிக்காக இரண்டரை மாதங்கள் ஒதுக்கப்படும். இதன்மூலம் எல்லா சர்வதேச கிரிக்கெட் வீரர்களாலும் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஐசிசி மற்றும் இதர கிரிக்கெட் வாரியங்களுடன் இதுபற்றி விவாதித்துள்ளோம் என்றார். 

ஐபிஎல் 2022 போட்டியில் மொத்தமாக 74 ஆட்டங்கள் நடைபெற்றன. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் வருடம் 59 ஆட்டங்களே நடைபெற்றன. 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்தவும் அதற்கடுத்த இரு ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களை நடத்தவும் பிசிசிஐ திட்டுமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது:

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள் தொடர்ந்து நடைபெறும். ஐபிஎல் என்பது ஓர் இந்தியப் போட்டி. இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள் மற்ற நாடுகள் வருமானம் ஈட்ட நடத்தப்படுகின்றன. மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு அவை முக்கியம். அடுத்த இரு வருடங்களுக்குத் தலா 74 ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறும். அடுத்த எஃப்.டி.பி. அட்டவணையைக் கவனமாகத் திட்டமிட வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT