506 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா: நம்பிக்கை அளிக்கும் பாகிஸ்தான் பேட்டர்கள்
பாகிஸ்தான் அணி 75 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 4-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்று தொடங்கியது. ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்று தொடங்குகிறது. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 1998-ல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸி. அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடருக்கு பெனாட் - காதிர் கோப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிரா ஆனது.
கராச்சியில் பாகிஸ்தான் - அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா. உஸ்மான் கவாஜா 160, ஸ்மித் 72, அலெக்ஸ் கேரி 93 ரன்கள் எடுத்தார்கள். பேட் கம்மின்ஸ் 34, ஸ்வெப்சன் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆசியாவில் ஆஸ்திரேலிய அணியின் 6-வது பெரிய ஸ்கோர் இது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி பேட்டர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். ஒருவராலும் 40 ரன்னைத் தொட முடியாமல் போனது. கேப்டன் பாபர் ஆஸம் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி கடைசி விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
408 ரன்கள் முன்னிலை பெற்று பாகிஸ்தானை ஃபாலோ ஆன் செய்த ஆஸ்திரேலிய அணி, 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முன்வந்தது. 3-ம் நாள் முடிவில் 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. கவாஜா 35, லபுஷேன் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
4-ம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 22.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லபுஷேன் 44, கவாஜா 44* ரன்கள் எடுத்தார்கள். இதனால் 2-வது டெஸ்டை வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி 75 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷஃபிக் 212 பந்துகளில் 66 ரன்களும் பாபர் ஆஸம் 170 பந்துகளில் 95 ரன்களும் எடுத்து நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார்கள். இதனால் வெற்றிக்கான நம்பிக்கையுடன் டெஸ்டின் முடிவை பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.