செய்திகள்

விஜய் ஹசாரே: பல உலக சாதனைகளுடன் வெற்றி பெற்ற தமிழக அணி

DIN


விஜய் ஹசாரே போட்டியில் அருணாசல பிரதேச அணியை  435 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளது தமிழக அணி. 

இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3-வது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்திலும் 5-வது ஆட்டத்தில் ஹரியாணாவை 151 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 

தனது 6-வது ஆட்டத்தில் அருணாசல பிரதேசத்தை எதிர்கொண்டது தமிழக அணி. பெங்களூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற அருணாசல பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த தமிழக வீரர் ஜெகதீசன் இன்று தனது தொடர்ச்சியான 5-வது சதத்தை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார். மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனும் சதமடித்தார். இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் சாய் சுதர்சன் எடுத்த 3-வது சதம் இது. 

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்தார் ஜெகதீசன். விஜய் ஹசாரே போட்டியிலும் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையையும் அடைந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜெகதீசன் 114 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் இரட்டைச் சதமடித்து அசத்தினார். முதல் 100 ரன்களை 76 ரன்களில் எடுத்த ஜெகதீசன், அடுத்த 100 ரன்களை 38 பந்துகளில் எடுத்தார்.

கடைசியில் 277 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஜெகதீசன். அவர் 141 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளுடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற புதிய உலக சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு சர்ரே அணியைச் சேர்ந்த ஏடி பிரெளன் 2022-ல் 268 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 

சாய் சுதர்சன் 102 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகளுடன் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஜெகதீசனும் சாய் சுதர்சனும் 38.3 ஓவர்களில் 416 ரன்கள் எடுத்தார்கள். இதுவும் ஓர் உலக சாதனை தான். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இதற்கு முன்னால் எந்தவொரு ஜோடியும் இத்தனை ரன்கள் எடுத்ததில்லை. 

தமிழக அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. இதற்கு முன்னால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையைத் தமிழக அணி முறியடித்தது.  

அருணாசல பிரதேச அணி, 28.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஒரு வீரராலும் 20 ரன்களைக் கூடத் தொட முடியவில்லை. எம். சித்தார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அருணாசல பிரதேசத்தை 435 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழக அணி இதிலும் இன்னொரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. 1990-ல் சோமர்செட் அணி 346 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் 350 ரன்கள் வித்தியாசத்தில் கூட வென்றிராத நிலையில் தமிழக அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மற்றொரு உலக சாதனையைப் படைத்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT