ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் எவை?
ஜூன் 22 அன்று பெங்களூரில் நடைபெறும் இறுதிச்சுற்றில்...
2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு மும்பை - மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.
பெங்களூரில் மும்பை - உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 140.4 ஓவர்களில் 393 ரன்கள் எடுத்தது. யாஷஸ்வி ஜெயிஸ்வால் 100 ரன்களும் ஹார்திக் தாமோர் 115 ரன்களும் எடுத்தார்கள். சர்பராஸ் கான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கரண் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தரப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில், 54.3 ஓவர்களில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சாளர் ஷிவம் மவி மட்டும் நன்கு விளையாடி 48 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 156 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 533 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெயிஸ்வால் 181, அர்மான் ஜாஃபர் 127, சர்பராஸ் கான் 59* ரன்கள் எடுத்தார்கள்.
5-ம் நாளில் இறுதியில் 746 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் காரணமாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை ஜெயிஸ்வால் வென்றார். 2016-17-க்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி.
அலூரில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் மத்தியப் பிரதேச அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மத்தியப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 105.3 ஓவர்களில் 341 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹிமான்ஷு மந்த்ரி 165 ரன்கள் எடுத்தார். பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 89.2 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி 102, ஷாபாஸ் அஹமது 116 ரன்கள் எடுத்தார்கள். மத்தியப் பிரதேச அணி 2-வது இன்னிங்ஸில் 114.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் பெங்கால் அணிக்கு 350 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 2-வது இன்னிங்ஸில் 65.2 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்து 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குமார் கார்த்திகேயா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மத்தியப் பிரதேச அணி 23 வருடங்களுக்குப் பிறகு ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஜூன் 22 அன்று பெங்களூரில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதுகின்றன.