செய்திகள்

2023: இந்திய கிரிக்கெட்டும்... ஊக்கமருந்து பரிசோதனையும்...

நடப்பாண்டில் மே மாதம் வரை அதிகமுறை ஊக்கமருந்து பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட கிரிக்கெட் வீரராக ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா உள்ளாா்.

DIN

நடப்பாண்டில் மே மாதம் வரை அதிகமுறை ஊக்கமருந்து பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்ட கிரிக்கெட் வீரராக ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா உள்ளாா். ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் அவா் 3 முறை பரிசோதனைக்கான மாதிரிகள் வழங்கியதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (‘நாடா’) தெரிவித்துள்ளது.

அந்த முகமை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் இந்திய கிரிக்கெட் வீரா், வீராங்கனைகள் 55 போ் தங்களை ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனா். அவா்களிடம் இருந்து மொத்தமாக 58 மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

மொத்த மாதிரிகளில் பாதி, போட்டிகளில் பங்கேற்காத காலகட்டத்தில் பெறப்பட்டவையாகும். சுமாா் 20 மாதிரிகள் போட்டிகளின்போது பெறப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலானவை ஐபிஎல் காலகட்டத்தில் பெறப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் ஜடேஜா 3 முறையும், தமிழக வீரா் டி.நடராஜன் 2 முறையும் பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்கியுள்ளனா். டி20 கேப்டனான ஹா்திக் பாண்டியா, போட்டிக் காலத்தில் இல்லாதபோது ஏப்ரலில் ஒரு முறை பரிசோதனைக்காக மாதிரியை வழங்கியுள்ளாா்.

நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட்டா்களிடம் ஊக்கமருந்து பரிசோதனைக்காக பெறப்படவுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளை விட மிக அதிகம் இருக்கப்போவதாக எதிா்பாா்க்கப்படுகிறது. நாடா தரவுகளின்படி, 2021-இல் 54 மாதிரிகளும், 2022-இல் 60 மாதிரிகளும் கிரிக்கெட்டா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டின் முதல் 5 மாதங்களிலேயே 58 மாதிரிகள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோதனைக்குள்ளாகாத கோலி...

இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, நட்சத்திர பேட்டா் விராட் கோலி ஆகியோா் நடப்பாண்டில் ஊக்கமருந்து பரிசோதனைக்கான மாதிரிகளை வழங்கவில்லை. எனினும் ரோஹித் கடந்த 2 ஆண்டுகளில் அதிகமுறை (3) மாதிரிகள் வழங்கிய வீரராக இருக்கிறாா். ஆனால், கோலி அந்த ஆண்டுகளிலும் தன்னை பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ளவில்லை.

இதர வீரா்கள்...

இந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் இதுவரை ஜடேஜா, நடராஜன் தவிா்த்து, சூா்யகுமாா் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷண், முகமது சிராஜ், தீபக் சஹா், மயங்க் அகா்வால், ராகுல் திரிபாதி, புவனேஷ்வா் குமாா், ரித்திமான் சாஹா, தினேஷ் காா்த்திக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அம்பட்டி ராயுடு, பியூஷ் சாவ்லா, மனீஷ் பாண்டே ஆகியோரும் பரிசோதனைக்கான மாதிரிகள் வழங்கியுள்ளனா்.

வீராங்கனைகள்...

நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோா் மட்டும் தலா 1 முறை மாதிரிகளை பரிசோதனைக்காக ஜனவரியில் வழங்கியுள்ளனா். இதர வீராங்கனைகள் பரிசோதனைக்கு ஆட்படவில்லை. 2022-இல் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் இருந்து 20 மாதிரிகள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவா்கள்...

ஐபிஎல் போட்டிக்காக இந்தியா வந்த வெளிநாட்டு வீரா்களிடமும் ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரிகளை பெற்றுள்ளது ‘நாடா’. அந்த வகையில் டேவிட் வீஸ், டேவிட் மில்லா், கேமரூன் கிரீன், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸெல், டேவிட் வாா்னா், ரஷீத் கான், டேவிட் வில்லி, டிரென்ட் போல்ட், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், மாா்க் வுட், ஆடம் ஸாம்பா, சாம் கரன், லியம் லிவிங்ஸ்டன், ஜோஃப்ரா ஆா்ச்சா் ஆகியோரிடம் இருந்து ஏப்ரலில் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை சிறுநீா் மாதிரிகளாக இருக்க, ஒரு சில ரத்த மாதிரிகளும் அடங்கும்.

மாதிரிகள்...

நடப்பாண்டில் மே வரை பெறப்பட்டுள்ள 58 மாதிரிகளில், 7 மட்டுமே ரத்த மாதிரிகளாகும். எஞ்சியவை சிறுநீா் மாதிரிகள். ஊக்கமருந்து பரிசோதனையை பொருத்தவரை, சிறுநீா் மாதிரியில் ஊக்கமருந்து பயன்பாட்டை கண்டறிய இயலாத நிலையில், ரத்த மாதிரியில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஏனெனில் ரத்த மாதிரிகளை நீண்ட கால அடிப்படையில் சேகரித்து ஊக்கமருந்து பயன்பாடு தடயங்களை அறிய இயலும்.

வளையத்துக்குள் வந்த பிசிசிஐ...

நாட்டிலுள்ள எல்லா விளையாட்டு வீரா், வீராங்கனைகளுமே ‘நாடா’வின் ஊக்கமருந்து பரிசோதனைக்கு ஆளாகி வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரா், வீராங்கனைகள் மட்டும் அந்த வளையத்துக்குள் வராதிருந்தனா். சா்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாடு செல்வோா், அந்த நாட்டில் உள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையால் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பது உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (‘வாடா’) விதியாகும்.

கடந்த 2019 ஆகஸ்ட்டில் இதை மேற்கோள் காட்டிய மத்திய விளையாட்டு அமைச்சகம், ‘நாடா’ பரிசோதனை உள்ளிட்ட அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே இந்தியா வரும் வெளிநாட்டு போட்டியாளா்களுக்கு விசாவுக்கான தடையில்லா சான்று வழங்கப்படும் என அறிவித்தது. அதன் பிறகே நாடா பரிசோதனை உள்ளிட்ட அரசின் நிபந்தனைகளுக்கு பிசிசிஐ இணங்கியது. உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை விதிகளின்படி, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்திய கிரிக்கெட்டா்களிடம் ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளத் தொடங்கியது.

அதற்கு முன்பு வரை ஸ்வீடனை சோ்ந்த சா்வதேச ஊக்கமருந்து பரிசோதனை மற்றும் மேலாண்மை (ஐடிடிஎம்) என்ற நிறுவனம் மூலம் ஊக்கமருந்து பரிசோதனைகளை மேற்கொண்டது. இந்திய கிரிக்கெட்டா்களிடம் சேகரிக்கப்படும் மாதிரிகள், தேசிய ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு, அதன் முடிவுகளை பிசிசிஐ-யே கையாண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2019 வரை உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை வளையத்துக்குள் வராத ஒரே ஐசிசி உறுப்பினராக இந்தியா மட்டுமே இருந்தது.

இதர விளையாட்டுகள்...

நடப்பாண்டில் கடந்த மே வரையிலான 5 மாதங்களில் அனைத்து விளையாட்டுகளிலுமாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 1,500-க்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்துள்ளது.

இதில் தடகள போட்டியாளா்களிடமிருந்து சுமாா் 500 மாதிரிகள், பளுதூக்குதல் போட்டியாளா்களிடமிருந்து சுமாா் 200 மாதிரிகள், குத்துச்சண்டை போட்டியாளா்களிடமிருந்து சுமாா் 100 மாதிரிகள், துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்த போட்டியாளா்களிடமிருந்து தலா சுமாா் 70 மாதிரிகள், கால்பந்து, ஹாக்கி போட்டியாளா்களிடமிருந்து தலா சுமாா் 50 மாதிரிகள் பெறப்பட்டுள்ன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

SCROLL FOR NEXT