முகப்பு
செய்திகள்

முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் நிதானத் தொடக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 2  விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:26 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 2  விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. 

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 15) தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி  முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப்பை அமர் ஜமால் உடைத்தார். அலெக்ஸ் கேரியை 34 ரன்களுக்கு அமர் ஜமால் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பின் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 107 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும்  ஒரு சிக்ஸர் அடங்கும். 

இறுதியில் 487 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அமர் ஜமால் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குர்ரம் ஷாசத் 2 விக்கெட்டுகளையும், ஷகீன் அஃப்ரிடி மற்றும்  ஃபஹீம் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டினையும்  கைப்பற்றினர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது பாகிஸ்தான். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அப்துல்லா சஃபீக் மற்றும் இமாம் உல் ஹக் நிதானமாக விளையாடினர். இருப்பினும், நாதன் லயன் பந்துவீச்சில் அப்துல்லா சஃபீக் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. இமாம் உல் ஹக் 38 ரன்களுடனும், குர்ரம் ஷாசத் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 355 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →