மந்தனா, ரேணுகா, ரிச்சா கோஷ் என வலுவான வீராங்கனைகளை ஏலத்தில் தேர்வு செய்துள்ளது ஆர்சிபி அணி.
பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடா் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது. இதில் பங்கேற்று ஆட பல்வேறு வெளிநாட்டு வீரா்களும் தீவிர ஆா்வம் காண்பிக்கின்றனா். முதன்முதலாக மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா். கடந்த 2008-இல் ஆடவா் ஐபிஎல் தொடா் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.
டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன.
டபிள்யூபிஎல் வீராங்கனைகளுக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். எனவே அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். ஒவ்வொரு அணியும் 6 வெளிநாட்டு வீராங்கனைகளைத் தேர்வு செய்துகொள்ளலாம். எனவே ஏலத்தில் 30 வெளிநாட்டு வீராங்கனைகளை அணிகள் தேர்வு செய்யவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 4 வெளிநாட்டு வீராங்கனைகள் இடம்பெறுவார்கள். அசோசியேட் வீராங்கனை ஒருவரைச் சேர்த்துக்கொண்டால் 5 வெளிநாட்டு வீராங்கனைகளுடன் விளையாட அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ. 12 கோடி வரை செலவு செய்யமுடியும்.
மும்பையில் இன்று நடைபெற்று வரும் டபிள்யூபிஎல் வீராங்கனைகளுக்கான ஏலத்தில் முதல் ஏழு சுற்றுகளின் வழியாக 25 வீராங்கனைகள் தேர்வாகியுள்ளார்கள். அடுத்தடுத்த சுற்றுகளில் மேலும் பல வீராங்கனைகள் தேர்வாகவுள்ளார்கள்.
முதல் ஏழு சுற்றுகளின் முடிவில் தேர்வான வீராங்கனைகள்
ஆர்சிபி: மந்தனா, சோபி டிவைன், எலீஸ் பெர்ரி, ரேணுகா, ரிச்சா கோஷ்
மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்ப்ரீத் கெளர், நாட் சிவர்-பிரண்ட், அமீலியா கெர், பூஜா வஸ்த்ரகர், யாஷ்திகா
குஜராத் ஜெயண்ட்ஸ்: கார்ட்னர், மூனி, டங்க்லி, சுதர்லேண்ட், டியோல், டாட்டின்
உ.பி. வாரியஸ்: எக்லஸ்டோன், தீப்தி சர்மா, மெக்ராத், இஸ்மாயில், ஹீலி, அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி
தில்லி கேபிடல்ஸ்: ஜெமிமா ரோட்ரிகஸ், மெக் லேனிங், ஷஃபாலி வர்மா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.