ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் 2-இல் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையை தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
இந்த தில்லி டெஸ்ட்டில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடி வந்த ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை காலை செஷனிலேயே 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையை, இந்திய ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா முற்றிலுமாகச் சிதைத்தார். அவருக்கு அஸ்வினும் துணை நிற்க, சுழலியே சுருண்டது ஆஸ்திரேலியா.
பின்னர் 114 ரன்களை நோக்கி ஆடிய இந்தியா, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த ஜடேஜா "ஆட்டநாயகன்' ஆனார்.
முன்னதாக, கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தனது இன்னிங்ûஸ ஆடிய இந்தியாவும் சற்றே தடுமாற, 262 ரன்களுக்கு ஆட்டம் முடிந்தது. இதையடுத்து 1 ரன் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, சனிக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.
3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் - மார்னஸ் லபுசான் தொடர்ந்தனர். 2-ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த இந்தக் கூட்டணியில் முதலில் ஹெட் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 43 ரன்களுக்கு வெளியேறினார். லபுசான் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
அதன் பிறகு வந்த பேட்டர்கள் நிலைக்கவே இல்லை. ஒற்றை இலக்க ரன்னிலோ, பூஜ்யத்திலோ வெளியேறினர். ஸ்டீவ் ஸ்மித் 9, மேத்யூ ரென்ஷா 2, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 0, அலெக்ஸ் கேரி 7, கேப்டன் பேட் கம்மின்ஸ் 0, நேதன் லயன் 8, மேத்யூ குனேமான் 0 என விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்தன. இவ்வாறாக 113 ரன்களில் ஆஸ்திரேலியாவின் 2-ஆவது இன்னிங்ஸ் முடிந்தது.
52 ரன்களுக்குள்ளாக 9 விக்கெட்டுகளை இழந்து விக்கித்தது ஆஸ்திரேலியா.
இந்திய பெüலிங்கில் ஜடேஜா 7, அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் 114 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியா, 26.4 ஓவர்களில் 118 ரன்களை எட்டி வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 31, கே.எல்.ராகுல் 1, விராட் கோலி 3 பவுண்டரிகளுடன் 20, ஷ்ரேயஸ் ஐயர் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சேதேஷ்வர் புஜாரா 4 பவுண்டரிகளுடன் 31, ஸ்ரீகர் பரத் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தனது இந்த 100-ஆவது டெஸ்ட்டில் பெரிதாக ரன்கள் சேர்க்க முடியாமல் போன புஜாரா, ஆறுதலாக இந்திய வெற்றிக்கான பவுண்டரியை விளாசினார். ஆஸ்திரேலிய பெüலிங்கில் நேதன் லயன் 2, டாட் மர்ஃபி 1 விக்கெட் சாய்த்தனர். இரு அணிகளும் மோதும் 3-ஆவது ஆட்டம் வரும் மார்ச் 1-ஆம் தேதி இந்தூரில் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.