செய்திகள்

சதமடித்த ரோஹித் சர்மா, ஷுப்மன் கில்: 385 ரன்கள் குவித்த இந்திய அணி!

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் ஆட்டம், இந்தூரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் சிப்லிக்குப் பதிலாக ஜகோப் டஃபி தேர்வாகியுள்ளார். இந்திய அணியில் இரு மாற்றங்கள். ஷமி, சிராஜுக்குப் பதிலாக உம்ரான் மாலிக், சஹால் விளையாடுகிறார்கள். 

ஆரம்பம் முதல் வேகமாக ரன்கள் எடுத்தார்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும். 10 ஓவர்களின் முடிவில் 82 ரன்கள் கிடைத்தன. ஷுப்மன் கில் 32 பந்துகளிலும் ரோஹித் சர்மா 41 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். தொடர்ந்து வேகமாக ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் 25-வது ஓவரில் 200 ரன்களைத் தொட்டது. 

நீண்ட நாள் கழித்து ஒருநாள் சதமெடுத்தார் ரோஹித் சர்மா, 83 பந்துகளில். இது அவருடைய 30-வது ஒருநாள் சதம். ஜனவரி 2020-க்குப் பிறகு முதல்முறையாக சதமெடுத்துள்ளார். அடுத்ததாக ஷுப்மன் கில் 72 பந்துகளில் சதமெடுத்தார். இது அவருடைய 4-வது ஒருநாள் சதம். கடந்த 4 ஒருநாள் ஆட்டங்களில் இரட்டைச் சதம் உள்பட மூன்று சதங்களை எடுத்துள்ளார் கில். 

எனினும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். ரோஹித் சர்மா 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்களிலும் ஷுப்மன் கில் 78 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 157 பந்துகளில் 212 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது.

விராட் கோலியும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ரன் எடுக்கும்போது கோலியுடன் ஏற்பட்ட குழப்பத்தில் இஷான் கிஷன் 17 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். சூர்யகுமார் 14, வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 43-வது ஓவரிலேயே 313 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. இதன்பிறகு பாண்டியாவும் ஷர்துல் தாக்குரும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோர் 375 ரன்களைத் தாண்ட உதவினார்கள். பாண்டியா - ஷர்துல் ஜோடி 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தது. 

ஷர்துல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாண்டியா 36 பந்துகளில் அரை சதமெடுத்தார். 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது. ஜகோப் டஃபி, டிக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT