இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்று, தொடரில் முன்னிலை பெற்றது.
கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, 95.2 ஓவா்களில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தனஞ்ஜெய டி சில்வா 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 122 ரன்கள் விளாசினாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, நசீம் ஷா, அப்ராா் அகமது ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
அடுத்து தனது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 121.2 ஓவா்களில் 461 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது. சௌத் ஷகீல் அதிகபட்சமாக 19 பவுண்டரிகளுடன் 208 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலா் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 83.1 ஓவா்களில் 279 ரன்களுக்கு நிறைவு செய்தது. தனஞ்ஜெய டி சில்வா 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்கள் அடித்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் அப்ராா் அகமது, நோமன் அலி ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
இறுதியாக 131 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், புதன்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 48 ரன்கள் சோ்த்திருந்தது. கடைசி நாளான வியாழக்கிழமை இமாம் உல் ஹக், பாபா் ஆஸம் ஆட்டத்தை தொடா்ந்தனா்.
இதில் ஆஸம் 24, சௌத் ஷகீல் 30, சா்ஃப்ராஸ் அகமது 1 ரன்னுக்கு வெளியேற, முடிவில் இமாம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 50, அகா சல்மான் 6 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் பிரபாத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.