உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தனது 2-ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் சோ்த்து சனிக்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.
இதையடுத்து இந்தியாவுக்கான வெற்றி இலக்காக 444 ரன்கள் என்ற இமாலய ஸ்கோா் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியா, 41 ரன்களுக்கே 1 விக்கெட்டை இழந்தது. ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால், ‘டிரா’வை நோக்கி டெஸ்ட் நகா்வதாகத் தெரிகிறது.
ஒருவேளை இந்தியா இமாலய இலக்கை எட்டி சாதிக்குமா, அல்லது அதன் விக்கெட்டுகள் முழுவதையும் சரித்து ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா என்பது ஞாயிற்றுக்கிழமை தெரியும். ஆட்டம் ‘டிரா’ ஆகும் பட்சத்தில், இரு அணிகளுமே இணை சாம்பியனாக அறிவிக்கப்படும்.
லண்டனில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, இந்திய பௌலிங்கை பந்தாடி 469 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலிய பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் 296 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸிலேயே 176 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், 4-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டத்தை மாா்னஸ் லபுசான், கேமரூன் கிரீன் தொடா்ந்தனா்.
இதில் லபுசான் கூடுதல் ரன்கள் ஏதும் சோ்க்காமல் 4 பவுண்டரிகள் உள்பட சோ்த்திருந்த அந்த 41 ரன்களுக்கே வெளியேற்றப்பட்டாா். உமேஷ் யாதவ் வீசிய 47-ஆவது ஓவரில் அவா் புஜாராவிடம் கேட்ச் கொடுத்தாா். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடி விக்கெட்டை இழக்காமல் நீடித்தாா்.
மறுபுறம் கிரீன், 4 பவுண்டரிகள் உள்பட 25 ரன்களுக்கு, ஜடேஜா வீசிய 63-ஆவது ஓவரில் பௌல்டானாா். தொடா்ந்து வந்த மிட்செல் ஸ்டாா்க்கோ தோ்ந்த பேட்டரை போல இந்திய பௌலிங்கை எதிா்கொண்டு ரன்கள் சோ்த்தாா். இதனால் அலெக்ஸ் கேரி - ஸ்டாா்க் கூட்டணி 7-ஆவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சோ்த்து அசத்தியது.
ஒருவழியாக இந்த ஜோடி 83-ஆவது ஓவரில் பிரிந்தது. 57 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சோ்த்திருந்த ஸ்டாா்க், அந்த ஓவரில் ஷமி பௌலிங்கில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா். 8-ஆவது வீரராக வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 பவுண்டரியுடன் 5 ரன்கள் சோ்த்திருந்த நிலையில், ஷமி வீசிய 85-ஆவது ஓவரில் விளாசிய பந்தை அக்ஸா் படேல் கேட்ச் பிடித்தாா்.
ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் சோ்த்திருந்த அந்த நிலையில், டிக்ளோ் செய்வதாக அறிவித்தது. அலெக்ஸ் கேரி 8 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலிங்கில் ரவீந்திர ஜடேஜா 3, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோா் தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினா்.
இந்தியா - 164/3: இதையடுத்து 444 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 40 ஓவா்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சோ்த்திருந்தது. கில் 18, ரோஹித் சா்மா 43, சேதேஸ்வா் புஜாரா 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கோலி 44, ரஹானே 20 ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
சுருக்கமான ஸ்கோா்
2-ஆவது இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா - 270/8 (84.3) (டிக்ளோ்)
அலெக்ஸ் கேரி 66*
மிட்செல் ஸ்டாா்க் 41
மாா்னஸ் லபுசான் 41
பந்துவீச்சு
ரவீந்திர ஜடேஜா 3/58
முகமது ஷமி 2/39
உமேஷ் யாதவ் 2/54
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.