மூவர் சதம் விளாசல்: இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்க அணியில் மூன்று வீரர்களின் அசத்தல் சதங்களால் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியில் மூன்று வீரர்களின் அசத்தல் சதங்களால் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பையில் தில்லியில் இன்று நடைபெற்று வரும் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: யார் இந்த ரச்சின் ரவீந்திரா?
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், டி காக்குடன் ஜோடி சேர்ந்தார் ராஸி வாண்டர் துசென். இந்த இணை அபாரமாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். டி-காக் 84 பந்துகளில் 100 ரன்களும் (12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), வாண்டர் துசென் 110 பந்துகளில் 108 ரன்களும் (13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மார்கரம் அதிரடியான ஆட்டத்தினால் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் க்ளாசன் (32 ரன்கள்), டேவிட் மில்லர் (39 ரன்கள்) போன்றோர் அதிரடியாக ரன்கள் சேர்க்க தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 400 ரன்களைக் கடந்தது.
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க: மழையால் ஆட்டம் ரத்து: இந்திய அணிக்கு தங்கம்!
இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா, மதீஷா பதிரானா மற்றும் துனித் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.