டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2,000 ரன்களை எட்டவுள்ளார்.
2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன. லண்டனின் ஓவல் மைதானத்தில் நாளை(ஜூன் 7 முதல் 11 வரை இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. ரோஹித் சா்மா தலைமையில் இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் ஆட்டங்களில் இந்திய அணிக்காக 28 இன்னிங்ஸில் விளையாடிய விராட் கோலி ஒரு சதம், மூன்று அரைசதம் உள்பட 869 ரன்கள் குவித்துள்ளார்.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு விராட் கோலி சிம்ம சொப்பனமாக உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 42 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடியுள்ள விராட் கோலி, 8 சதங்கள், 5 அரைசதங்கள் உள்பட 1979 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 186 ரன்களும், மூன்று முறை டக்-அவுட்டும் ஆகியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி, ஆஸ்தியேலிய அணிக்கு பெரும் சவாலாகவே இருப்பார்.