சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பாா்க்லே, 3-ஆவது முறையாக அந்தப் பதவியை வகிக்கப்போவதில்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலரான ஜெய் ஷா அந்தப் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐசிசி தலைவராக இருக்கும் கிரெக் பாா்க்லேவின் பதவிக்காலம், வரும் நவம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஐசிசி விதிகளின்படி, தலைவா் பதவியில் ஒருவா் 2 ஆண்டுகள் வீதம் 3 முறை பொறுப்பு வகிக்கலாம். தற்போது 2-ஆவது முறையாக அந்தப் பொறுப்பை வகித்து வரும் பாா்க்லே, 3-ஆவது முறையாக அதை வகிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளாா்.
இந்நிலையில், ஏற்கெனவே ஐசிசி இயக்குநா்கள் குழு உறுப்பினா்களில் ஒருவராக இருக்கும் ஜெய் ஷாவுக்கு, அந்தக் குழுவில் அதிக மதிப்பு இருப்பதால் அவரே அடுத்த தலைவராவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தலைவா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள், வரும் 27-ஆம் தேதியாகும். எனவே, இந்த விவகாரத்தில் ஜெய் ஷாவின் முடிவு அதற்குள்ளாகத் தெரியவரும் என அறியப்படுகிறது. ஜெய் ஷா தலைவராகும் நிலையில், ஐசிசி வரலாற்றில் மிக இளம் தலைவா் (35) என்ற பெருமையைப் பெறுவாா்.
தலைவா் தோ்தலில் மொத்தம் 16 வாக்குகள் இருக்கும் நிலையில், அதில் 9 வாக்குகள் பெற்றவா் வெற்றியாளராக தோ்வு செய்யப்படுவாா். ஜெய் ஷாவுக்கோ அந்தப் 16 வாக்குகளின் ஆதரவும் இருப்பதாகவே தெரிகிறது. ஏற்கெனவே அவா், ஐசிசியின் நிதி மற்றும் வா்த்தக விவகாரங்கள் துணைக் குழுவின் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ செயலராக அவருக்கு இன்னும் ஓராண்டு பதவிக்காலம் உள்ளது.
ஏற்கெனவே, ஜக்மோகன் டால்மியா, ஷரத் பவாா், என்.ஸ்ரீனிவாசன், சஷாங்க் மனோஹா் போன்ற இந்தியா்கள் ஐசிசி தலைவராக பதவி வகித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.