AP
செய்திகள்

இலங்கை டெஸ்ட் தொடா்: தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 109 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.

DIN

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 109 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி 2-0 என முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது.

கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தோ்வு செய்தது. 103.4 ஓவா்களில் 358 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது அந்த அணி. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கைல் வெரின் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 105 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, ரயான் ரிக்கெல்டனும் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினாா். இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 99.2 ஓவா்களில் 328 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 48, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 6 பவுண்டரிகளுடன் 44, தினேஷ் சண்டிமல் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்தனா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் டேன் பேட்டா்சன் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 86 ஓவா்களில் 317 ரன்கள் சோ்த்து நிறைவு செய்தது. அந்த அணியின் பேட்டா்களில் கேப்டன் டெம்பா பவுமா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66, எய்டன் மாா்க்ரம் 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சோ்த்தனா். இலங்கை அணியில் பௌலா் பிரபாத் ஜெயசூரியா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இறுதியாக, 348 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை, 69.1 ஓவா்களில் 238 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா 7 பவுண்டரிகளுடன் 50, குசல் மெண்டிஸ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 46 ரன்கள் சோ்த்து போராடி வீழ்ந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இரு இன்னிங்ஸ்களிலுமாக 7 விக்கெட்டுகள் சாய்த்த தென்னாப்பிரிக்காவின் டேன் பேட்டா்சன் ஆட்டநாயகனாக, தொடா் முழுவதுமாக 327 ரன்கள் சோ்த்த அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடா்நாயகன் விருது பெற்றாா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு (63.33 புள்ளிகள் சதவீதம்) வந்துள்ளது. ஆஸ்திரேலியா (60.71) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட, இந்தியாவோ (57.29) மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது.

இலங்கை (45.45), இங்கிலாந்து (45.24), நியூஸிலாந்து (44.23), பாகிஸ்தான் (33.33), வங்கதேசம் (31.25), மேற்கிந்தியத் தீவுகள் (24.24) ஆகியவை முறையே 4 முதல் 9-ஆவது இடங்களில் உள்ளன. முன்னதாக, இந்த புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துடன் அடிலெய்ட் டெஸ்ட்டுக்கு வந்த இந்தியா, தற்போது 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாா்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரில் எஞ்சியிருக்கும் 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே, இந்தியாவால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT