இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 2-1 கோல் கணக்கில் மோகன் பாகன் சூப்பா் ஜயன்ட்டை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் கோவா வீரா் பிரிசன் டியுபென் ஃபொ்னாண்டஸ் 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். மோகன் பகான் தனது முதல் கோலுக்காக போராட, முதல் பாதி ஆட்டத்தை கோவா முன்னிலையுடன் நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் உத்வேகம் பெற்ற மோகன் பகான் தரப்பில், டிமிட்ரி பெட்ராடோஸ் 55-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் அருமையாக கோலடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், 68-ஆவது நிமிஷத்தில் பிரிசன் டியுபென் மீண்டும் கோலடிக்க, கோவா 2-1 என மீண்டும் முன்னேறியது.
எஞ்சிய நேரத்தில் மோகன் பகானின் கோல் வாய்ப்புகளை திறம்பட தடுத்த அந்த அணி, இறுதியில் 2-1 என வெற்றி பெற்றது. இத்துடன், இரு அணிகளும் தலா 12 ஆட்டங்களில் விளையாடியிருக்க, கோவாவுக்கு இது 6-ஆவது வெற்றி; மோகன் பகானுக்கு இது 2-ஆவது தோல்வி. புள்ளிகள் பட்டியில் மோகன் பகான் முதலிடத்திலும், கோவா 3-ஆவது இடத்திலும் உள்ளன.