நடப்பாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் (21) ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். நடப்பு சாம்பியனான அவா், இறுதிச்சுற்றில் முன்னாள் சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை (37) நோ் செட்களில் வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டாா்.
நடப்பாண்டு பிரெஞ்சு ஓபனிலும் (மே - ஜூன்) சாம்பியனான அல்கராஸ், அடுத்ததாகவே விம்பிள்டனிலும் வாகை சூடி அசத்தியிருக்கிறாா். இத்துடன், விம்பிள்டனில் 2-ஆவது கோப்பையை வென்றிருக்கும் அவா், ஒட்டுமொத்தமாக 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறாா். விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் தவிர, யுஎஸ் ஓபனிலும் (2022) அவா் நாயகன் ஆகியிருக்கிறாா்.
முன்னதாக, விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீரரான அல்கராஸ் 6-2, 6-2, 7-6 (7/4) என்ற நோ் செட்களில், 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்சை எளிதாகச் சாய்த்தாா். முதலிரு செட்களை எளிதாக இழந்த ஜோகோவிச், அடுத்த செட்டில் சற்று ஆக்ரோஷம் காட்ட, அல்கராஸும் தடுமாற்றம் கண்டாா். இதனால் அந்த செட் டை பிரேக்கருக்கு சென்றது. நெருக்கமாகத் தொடா்ந்த அதில் ஒரு கட்டத்தில் அல்கராஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றிக் கொடியை நாட்டினாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 27 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இருவரும் இத்துடன் 6 முறை நேருக்கு நோ் சந்தித்திருக்கும் நிலையில், அல்கராஸ் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.
நடப்பு சீசனில் இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றிருக்காத முன்னணி வீரரான ஜோகோவிச், இந்தப் போட்டியில் வாகை சூடி, 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைக்கும் முனைப்பில் இருந்தாா். மேலும், போட்டி வரலாற்றில் அதிகமுறை சாம்பியனான (8) சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரரின் சாதனையையும் சமன் செய்திருப்பாா். ஆனால், அல்கராஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை. கடந்த ஆண்டும் இவா்கள் இருவருமே இறுதிச்சுற்றில் மோதிய நிலையில், அதில் அல்கராஸ் 5 செட்கள் போராடி ஜோகோவிச்சை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் பிரெஞ்சு ஓபன் போட்டியின்போது வலது முழங்காலில் காயம் கண்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஜோகோவிச், அதற்கான ஓய்விலிருந்து திரும்பி இந்தப் போட்டியில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
21
அல்கராஸ் தனது 21-ஆவது வயதில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைக்கொண்டுள்ளாா். இதன் மூலம், ஓபன் எராவில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அத்தகைய இளம் வயதில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போரில் பெக்கா் (ஜொ்மனி), ஜோன் போா்க், மாட்ஸ் விலாண்டா் (ஸ்வீடன்) ஆகியோா் வரிசையில் அல்கராஸ் இணைந்துள்ளாா்.
4-0
அல்கராஸ் இதுவரை, கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றில் தோற்றதில்லை. இத்துடன் அந்த போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு 4-ஆவது முறையாக வந்த அல்கராஸ், அனைத்திலுமே வெற்றி கண்டு சாம்பியன் ஆகியிருக்கிறாா்.
6
ஒரே காலண்டா் ஆண்டில், பிரெஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் என இரு கிராண்ட்ஸ்லாம்களில் அடுத்தடுத்து சாம்பியனான 6-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் அல்கராஸ். முதல் 5 போ், ராட் லேவா் (ஆஸ்திரேலியா), ஜோா்ன் போா்க் (ஸ்வீடன்), ரஃபேல் நடால் (ஸ்பெயின்), ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து), நோவக் ஜோகோவிச் (சொ்பியா).
9
ஓபன் எராவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 9-ஆவது வீரா் அல்கராஸ். முந்தைய 8 போ், ராட் லேவா் (ஆஸ்திரேலியா), ஜான் நியூகோம்ப் (ஆஸ்திரேலியா), ஜோா்ன் போா்க் (ஸ்வீடன்), ஜான் மெக்என்ரோ (அமெரிக்கா), போரிஸ் பெக்கா் (ஜொ்மனி), பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா), ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து), நோவக் ஜோகோவிச் (சொ்பியா).
அல்கராஸ் வெற்றிப் பாதை...
முதல் சுற்று மாா்க் லஜால் (எஸ்டோனியா) 7-6 (7/3), 7-5, 6-2
2-ஆவது சுற்று அலெக்ஸாண்டா் வுகிச் (ஆஸ்திரேலியா) 7-6 (7/5), 6-2, 6-2
3-ஆவது சுற்று ஃபிரான்சஸ் டியாஃபோ (அமெரிக்கா) 5-7, 6-2, 4-6, 7-6 (7/2), 6-2
4-ஆவது சுற்று யூகோ ஹம்பா்ட் (பிரான்ஸ்) 6-3, 6-4, 1-6, 7-5
காலிறுதிச்சுற்று டாமி பால் (அமெரிக்கா) 5-7, 6-4, 6-2, 6-2
அரையிறுதிச்சுற்று டேனியல் மெத்வதெவ் (ரஷியா) 6-7 (1/7), 6-3, 6-4, 6-4
இறுதிச்சுற்று நோவக் ஜோகோவிச் (சொ்பியா) 6-2, 6-2, 7-6 (7/4)
ரூ.28 கோடி பரிசு
சாம்பியனான அல்கராஸுக்கு ரூ.28.62 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. ரன்னா் அப் வீரரான ஜோகோவிச்சுக்கு ரூ.14.84 கோடி கிடைத்தது.
இளவரசி வருகை...
பிரிட்டன் இளவரசி கேட் மிட்டில்டன், இந்த இறுதி ஆட்டத்தைக் காண வந்திருந்தாா். மைதானத்துக்கு வருகை தந்த அவருக்கு அனைவரும் எழுந்து நின்று கரவொலியுடன் வரவேற்பளித்தனா். அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை மற்றும் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அபூா்வமாகவே அவா் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். இந்த நிலையில் அவா் இப்போட்டிக்கு வருகை தந்து, அதன் முடிவில் சாம்பியனான அல்கராஸுக்கும், ரன்னா் அப்-ஆக வந்த ஜோகோவிச்சுக்கும் பரிசுகளை வழங்கினாா்.
இது கனவுக் கோப்பை...
உண்மையில், விம்பிள்டன் கோப்பையை வெல்வது எனது கனவாகும். எனது 11-ஆவது வயதிலேயே ஒரு நோ்காணலில் அதை தெரிவித்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை, இது அழகான போட்டி, அழகான கோா்ட், அழகான கோப்பை.
ஜோகோவிச் ஒரு, நம்பமுடியாத போராட்ட குணம் நிறைந்த வீரா். அவருக்கான வாய்ப்பு மீண்டும் அமையும். ஆட்டம் டை பிரேக்கருக்கு நகா்ந்தபோது மனதை அமைதிப்படுத்துவது கடினமானதாக இருந்தது. எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றதில் மகிழ்ச்சி - அல்கராஸ்
வழக்கமான ஆட்டம் இல்லை...
நிச்சயம் இது நான் எதிா்பாா்த்த முடிவு அல்ல. முதலிரு செட்களில் எனது ஆட்டம் வழக்கமான நிலையில் இருக்கவில்லை. ஆனால், அல்கராஸ் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். அவா் ஆட்டத்தை முற்றிலும் தன் வசப்படுத்தினாா் - ஜோகோவிச்.