மகளிருக்கான 9-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் நாள் ஆட்டங்களில் இந்தியா - பாகிஸ்தான், நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகங்கள் மோதுகின்றன.
இப்போட்டியின் முதல் 4 எடிஷன்கள் ஒருநாள் கிரிக்கெட்டாக நடைபெற்ற நிலையில், அடுத்த 4 எடிஷன்களைப் போலவே இந்த முறையும் டி20 முறையில் போட்டி நடத்தப்படுகிறது.
இதில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து என 8 அணிகள் பங்கேற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா போட்டியில் இத்துடன் 7 முறை சாம்பியனாகி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வங்கதேசம் ஒருமுறை கோப்பை வென்றுள்ளது.
போட்டியில் பங்கேற்றுள்ள அணிகள், தலா 4 வீதம் 2 குரூப்-களாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். வரும் 28-ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
கடந்த முறை (2022) இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வாகை சூடிய இந்தியா, போட்டியின் வரலாற்றில் மொத்தமாக 20 ஆட்டங்களில் 17 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. இந்த முறையும், கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் தலைமையிலான இந்திய அணி, 8-ஆவது கோப்பை வெல்லும் முனைப்புடனேயே வருகிறது.
இந்தப் போட்டிக்கு முன்பாக சமீபத்தில், தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரை 1-1 என டிரா செய்துள்ளது இந்தியா. அதிலும் 2-ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் பாகிஸ்தான் அணியோ, கடந்த மே மாதம் இங்கிலாந்துடனான தொடரில் 0-3 என முழுமையாகத் தோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்திய அணியை பொருத்தவரை பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வா்மா ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். சமீபத்திய தொடா்களில் அவா்களின் ரன் குவிப்பே, நால்வரின் ஃபாா்மையும் பறைசாற்றுகிறது. பௌலிங்கிலும் கடந்த சில தொடா்களில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டது அணிக்கு வலு சோ்க்கிறது. வேகப்பந்து வீச்சுக்கு பூஜா வஸ்த்ரகா், ராதா யாதவ் ஆகியோா் இருக்க, சுழற்பந்து வீச்சில் தீப்தி சா்மா, சஜீவன் சஜனா, ஷ்ரேயங்கா பாட்டீல் மிரட்டுகின்றனா்.
பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரை, இங்கிலாந்து தொடருக்குப் பிறகு அணியில் பெரிதாக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கேப்டன் நிதா தாா் தக்கவைக்கப்பட்டுள்ளாா். ஐராம் ஜாவத், ஒமைமா சோஹைல், சையதா அரூப் ஷா ஆகிய மூவரும் இந்த ஆண்டு இதுவரை சா்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக களம் காணாத நிலையிலும் அணியில் இணைந்துள்ளனா்.
மற்றொரு ஆட்டத்தில் மோதும் நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகளில், நேபாளம் 2016-க்குப் பிறகு முதல் முறையாக இந்தப் போட்டியில் களம் காண்கிறது. அமீரகம், தொடா்ந்து 2-ஆவது முறையாக இங்கு பலத்தை பரிசோதிக்க வந்துள்ளது. கடைசியாக நேபாளம் கடந்த பிப்ரவரியில் விளையாடியிருக்க, அமீரகம் மே மாதத்தில் இலங்கையுடன் மோதியிருக்கிறது.
அணி விவரம்
இந்தியா: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (வி.கீ.), உமா சேத்ரி (வி.கீ.), பூஜா வஸ்த்ரகா், தீப்தி சா்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், டி. ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல், சஜீவன் சஜனா.
பாகிஸ்தான்: நிதா தாா் (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், ஃபாத்திமா சனா, குல் ஃபெரோஸா, ஐராம் ஜாவத், முனீபா அலி, நஜிஹா ஆல்வி (வி.கீ.), நஷ்ரா சாந்து, ஒமைமா சோஹைல், சாதியா இக்பால், சிட்ரா அமின், சையதா அரூப் ஷா, தஸ்மியா ருபப், துபா ஹசன்.
நேருக்கு நோ்...
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடம் மோதும் இந்தியா, டி20 ஃபாா்மட்டில் இதுவரை 14 முறை அந்த அணியுடன் மோதியிருக்கும் நிலையில், 11 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, இந்த முறையும் இந்தியாவுக்கு வெற்றி எளிதாக வாய்ப்புள்ளது.
குரூப் ‘ஏ’
இந்தியா
நேபாளம்
பாகிஸ்தான்
ஐக்கிய அரபு அமீரகம்
குரூப் ‘பி’
வங்கதேசம்
மலேசியா
இலங்கை
தாய்லாந்து
இன்றைய ஆட்டம்
நேபாளம் - அமீரகம்
பிற்பகல் 2 மணி
இந்தியா - பாகிஸ்தான்
இரவு 7 மணி
டம்புல்லா
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.