டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு சாதுரியமான முறையில் அணி நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவு. மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்களின் தன்மையை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைத் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்கள் மிகவும் மெதுவான ஆடுகளங்களாக இருக்கலாம். அதனால், அணித் தேர்வுக்குழு கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை அணியில் எடுத்துள்ளது. அதனால் கூட ரிங்கு சிங்குக்கு அணியில் இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால்,இது ரிங்கு சிங்கின் கிரிக்கெட் பயணத்தின் தொடக்கம் மட்டுமே. அதனால் அவர் அணியில் சேர்க்கப்படாது குறித்து மனம் தளரக் கூடாது.
50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆதிக்கம் செலுத்தின. டி20 உலகக் கோப்பையிலும் இந்த இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி சிறப்பாக உள்ளது. அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்றுக் கொடுப்பவர்கள் என்றார்.
டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.