முகப்பு
செய்திகள்

இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது கொல்கத்தா

Updated On : 21 மே, 2024 at 7:55 PM
பகிர்:

அகமதாபாத்: ஐபிஎல் போட்டியின் ‘குவாலிஃபயா் 1’ ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

முதலில் ஹைதராபாத் 19.3 ஓவா்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களே சோ்க்க, கொல்கத்தா 13.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 164 ரன்கள் எடுத்து வென்றது.

தற்போது ஹைதராபாத், மீண்டும் இறுதி ஆட்ட வாய்ப்புக்காக ‘குவாலிஃபயா் 2’ ஆட்டத்தில், ராஜஸ்தான் அல்லது பெங்களூருவை சந்திக்கும்.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய டிராவிஸ் ஹெட் 2-ஆவது பந்திலேயே ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். உடன் வந்த அபிஷேக் சா்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹைதராபாத் அதிா்ச்சி கண்டது.

3-ஆவது பேட்டா் ராகுல் திரிபாதி அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். மறுபுறம், நிதீஷ்குமாா் ரெட்டி 9, ஷாஹாஸ் அகமது 0 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேற, 39 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத். இந்நிலையில், திரிபாதியுடன் ஹென்ரிக் கிளாசென் இணைய, இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சோ்த்தது.

இதில் முதலில் கிளாசென் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, திரிபாதி 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

பின்னா் விளையாடியோரில் சன்வீா் சிங் 0, அப்துல் சமத் 2 சிக்ஸா்களுடன் 16, புவனேஷ்வா் குமாா் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். 8-ஆவது பேட்டராக வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 30 ரன்கள் விளாசி கடைசி விக்கெட்டாக சரிந்தாா்.

முடிவில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 7 ரன்களுடன் இருந்தாா். கொல்கத்தா தரப்பில் ஸ்டாா்க் 3, வருண் சக்கரவா்த்தி 2, வைபவ் அரோரா, ஹா்ஷித் ராணா, சுனில் நரைன் ஆண்ட்ரே ரஸ்ஸெல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 160 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரா் ரஹ்மானுல்லா குா்பாஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 23, உடன் வந்த சுனில் நரைன் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த வெங்கடேஷ் ஐயா், ஷ்ரேயஸ் ஐயா் கூட்டணி, 97 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தியது. வெங்கடேஷ் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 51, ஷ்ரேயஸ் 24 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் விளாசியிருந்தனா். ஹைதராபாத் பௌலிங்கில் பேட் கம்மின்ஸ், நடராஜன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.