அமெரிக்காவில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில், சின்னர் 7-6 (7/3), 7-6 (7/5), 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தார். இதன் மூலம், யுஎஸ் ஓபனில் அவர் 2-ஆவது முறையாக காலிறுதிச்சுற்றுக்கு வந்துள்ளார். அதில் அவர், 2021-ஆம் ஆண்டு சாம்பியனும், கடந்த ஆண்டு ரன்னர் அப் வீரருமான டேனியல் மெத்வதெவை எதிர்கொள்கிறார்.
உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் மெத்வதெவ் தனது 4-ஆவது சுற்றில், 6-0, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் போர்ச்சுகலின் நுனோ போர்ஜûஸ வெளியேற்றினார். அவர் யுஎஸ் ஓபனில் 5-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். தற்போது களத்திலிருக்கும் ஒரே முன்னாள் சாம்பியன் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னர் - மெத்வதெவ் இதுவரை 12 முறை சந்தித்துள்ள நிலையில், மெத்வதெவ் 7 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
இருவரும் கடைசியாக, விம்பிள்டன் காலிறுதியில் மோதியபோதும், மெத்வதெவ் வென்றது நினைவுகூரத்தக்கது. இதனிடையே, போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-0, 3-6, 6-3, 7-5 என்ற செட்களில், சக ஆஸ்திரேலியரான ஜோர்டான் தாம்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதில் அவர், பிரிட்டனின் ஜேக் டிரேப்பருடன் மோதுகிறார்.
போட்டித்தரவரிசையில் 25-ஆம் இடத்திலிருக்கும் டிரேப்பர் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் தாமஸ் மசாக்கை வெளியேற்றினார். இதன்மூலம், 2016-க்குப் பிறகு யுஎஸ் ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் பிரிட்டன் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக ஆண்டி முர்ரே அந்த ஆண்டில் காலிறுதிக்கு முன்னேறியிருந்தார். டிரேப்பருக்கு இது முதல் யுஎஸ் ஓபன் காலிறுதிச்சுற்றாகும்.
பெகுலாவை சந்திக்கும் ஸ்வியாடெக்
மகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆவது இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவை சாய்த்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது ஸ்வியாடெக்கின் 100-ஆவது வெற்றியாகும்.
காலிறுதியில் அவர், உள்நாட்டு வீராங்கனையான ஜெஸ்ஸிகா பெகுலாவை எதிர்கொள்கிறார். உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் பெகுலா, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை தோற்கடித்தார். ஸ்வியாடெக் - பெகுலா இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்திருக்க, ஸ்வியாடெக் 6 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறார். பெகுலா 2-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டித்தரவரிசையில் 22-ஆம் இடத்திலிருக்கும் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயா 6-2, 3-6, 6-3 என்ற செட்களில், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை வெளியேற்றினார். காலிறுதியில் அவர், செக் குடியரசின் கரோலின் முசோவாவை சந்திக்கிறார்.
முசோவா, 6-3, 6-3 என்ற நேர் செட்களில், உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை தோற்கடித்தார்.
அரையிறுதியில் போபண்ணா இணை
கலப்பு இரட்டையர் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 8}ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/இந்தோனேசியாவின் அல்டிலா சுஜியாடி 7-6 (7/4), 2-6, 10-7 என்ற செட்களில், 4-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென்/செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா கூட்டணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.