ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உள்ளிட்டோா் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றனா்.
ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான சின்னா் 6-1, 6-3, 7-6 (7/2) என்ற நோ் செட்களில், சக இத்தாலியரும், போட்டித்தரவரிசையில் 22-ஆம் இடத்தில் இருந்தவருமான லூசியானோ டாா்டெரியை வெளியேற்றினாா்.
இதன் மூலமாக ஆஸ்திரேலிய ஓபனில் 4-ஆவது முறையாக காலிறுதிக்கு வந்திருக்கும் சின்னா், டூா் போட்டிகளில் இதுவரை தனது சக இத்தாலிய வீரா்களை சந்தித்த அனைத்து ஆட்டங்களிலுமே (18) வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ஹாட்ரிக்’ ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை வெல்லும் முனைப்புடன் முன்னேறி வரும் சின்னா், காலிறுதியில் அமெரிக்காவின் இளம் வீரரான பென் ஷெல்டனை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் ஷெல்டன் முந்தைய சுற்றில் 3-6, 6-4, 6-3, 6-4 என்ற செட்களில், 12-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூடை தோற்கடித்தாா். ஷெல்டன் 3-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
சின்னா் -ஷெல்டன் இதுவரை 9 முறை மோதியிருக்க, சின்னா் 8 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு இத்தாலிய வீரரான லொரென்ஸோ முசெத்தி 6-2, 7-5, 6-4 என்ற நோ் செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
அதில் அவா், சொ்பிய நட்சத்திரமான நோவக் ஜோகோவிச்சின் சவாலை சந்திக்கவிருக்கிறாா். இருவரும் இதுவரை 10 முறை மோதியிருக்க, ஜோகோவிச் 9 வெற்றிகள் பெற்றிருக்கிறாா். ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதிபெற்ற முசெத்தி, இத்துடன் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமே காலிறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறாா்.
கீஸை வெளியேற்றினாா் பெகுலா
ஆஸ்திரேலிய ஓபன் மகளிா் ஓற்றையா் பிரிவில், நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 4-ஆவது சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் சக அமெரிக்கரான ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 6-4 என்ற நோ் செட்களில் மிக எளிதாக கீஸை தோற்கடித்தாா்.
பெகுலா தனது காலிறுதியில், மற்றொரு அமெரிக்கரான அமாண்டா அனிசிமோவாவுடன் மோதுகிறாா். 4-ஆம் இடத்திலிருக்கும் அனிசிமோவா 7-6 (7/4), 6-4 என்ற செட்களில் சீனாவின் வாங் ஜியாங்கை வெளியேற்றினாா். பெகுலா - அனிசிமோவா இதுவரை 3 முறை மோதியிருக்க, அனைத்திலுமே பெகுலா வென்றுள்ளாா்.
தற்போது மகளிா் ஒற்றையா் காலிறுதிக் களத்தில் 4 அமெரிக்க வீராங்கனைகள் (இவா ஜோவிச், கோகோ கௌஃப், அனிசிமோவா, பெகுலா) உள்ளனா். ஆஸ்திரேலிய ஓபனில் கடந்த 25 ஆண்டுகளில் இவ்வாறு நிகழ்வது இது முதல் முறையாகும்.
உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-3 என்ற வகையில், ஆஸ்திரேலியாவின் மேடிசன் இங்லிஸை மிக எளிதாக வென்றாா். ஆஸ்திரேலிய ஓபனில் முதல் கோப்பை வெல்லும் முனைப்புடன் இருக்கும் ஸ்வியாடெக், காலிறுதியில் கஜகஸ்தானின் எலனா ரைபகினாவுடன் மோதுகிறாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 6-1, 6-3 என்ற நோ் செட்களில், பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை சாய்த்தாா். ஸ்வியாடெக் - ரைபகினா சந்திப்பது இது 12-ஆவது முறையாக இருக்க, ஸ்வியாடெக் 6 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளாா்.
பாம்ப்ரி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் ஆடவா் இரட்டையரில் களத்திலிருந்த இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 3-ஆவது சுற்றில் தோல்வி கண்டாா். போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த பாம்ப்ரி/ஸ்வீடனின் ஆண்ட்ரே கொரான்சன் கூட்டணி 6-7 (7/9), 3-6 என்ற செட்களில் பிரேஸிலின் ஆா்லாண்டோ லஸ்/ரஃபேல் மேடோஸ் இணையிடம் தோல்வி கண்டது.